ஆளுநர் - அரசு மோதல்


பாஜக ஆளாத மாநிலங்களில் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே அதிகார போட்டி நிலவி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. 


இச்சூழலில், முதலமைச்சர் ஸ்டாலின் `ஆளுநரை அவதூறாகப் பேசக்கூடாது' என தன்னுடைய கட்சியினருக்கு அறிவுரை வழங்கியிருந்தார். இருப்பினும், ஆர்.எஸ்.பாரதி உள்பட திமுகவினர் சிலர் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை அவதூறாகப் பேசிவருவதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது.


சர்ச்சை பேச்சு:


இதற்கிடையே, தமிழ்நாடு ஆளுநரை சுட்டுக் கொல்ல பயங்கரவாதியை அனுப்புவோம் என திமுக பேச்சாளார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சர்ச்சை கருத்து தெரிவித்த திமுகவின் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்ய வேண்டும் என்று பாஜகவின் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார். திமுகவின் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆர்.எஸ்.பாரதி ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.


அதே போல், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகராட்சி காவல் ஆணையருக்கு, ஆளுநரின் இணைச்செயலாளர் பிரசன்னா ராமசாமி கடிதம் அனுப்பியிருக்கிறார். 


ஆளுநர் தரப்பு புகார்:


அந்தக் கடிதத்தில், ``தமிழ்நாடு ஆளுநரை அவதூறாகப் பேசியதன் காரணமாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது குற்றவியல் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆளுநர் மாளிகையிலிருந்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் துணைத் தலைவர் கரு நாகராஜன் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். ஆளுநரை அவதூறாக விமர்சித்ததாக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது  டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


வழக்கு தாக்கல் செய்க:


இந்நிலையில், திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக உரிய நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தாக்கல் செய்யக் கோரி தமிழ்நாடு அரசுக்கு சென்னை மாநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.


தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கிய ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த பல்வேறு கருத்துக்களை வாசிக்காமலும் பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட பெயர்களைத் தவிர்த்தது தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.


ஆளுநரின் செயலைக் கண்டித்து சட்டப்பேரவையில் அங்கம் வகித்த தி.மு.க. கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.


இதற்கிடையே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோதே ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.


தமிழ்நாடு ஆளுநரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.