தென்னிந்தியா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் அருணாச்சல பிரதேசத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழையில் ஸ்கார்பியோ கார் அடித்துச்செல்லப்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அருணாச்சல பிரதேசம் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான இடம் ஒன்றில் வெள்ளை நிற ஸ்கார்ப்பியோ கார் ஒன்று நீரின் வேகத்தால் அடித்துச் செல்லப்படுவதை வீடியோ காட்டுகிறது. அந்த வீடியோவில் மூன்று பேர் முழங்கால் அளவுள்ள நீரை சுற்றி இருப்பதை காணலாம். அவர்கள் காரை மீட்க முயற்சித்து தோல்வி அடைந்தனர். பலமாக அடித்து வரப்பட்ட தண்ணீரில் மெது மெதுவாக பள்ளத்தாக்கை நோக்கி இழுக்கப்பட்ட SUV கார், பின்னர் சில நிமிடங்களில் வெள்ளம் காரணமாக பள்ளத்தாக்கில் சரிந்தது. இதனை அவ்வழியாக காரில் சென்ற ஒருவர் வீடியோவாக எடுத்து பதிவேற்றியிருக்கிறார்.
வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அருணாச்சல பிரதேசத்தில் செப்டம்பர் 25 வரை அதிக மழை பெய்யும் என்று கணித்துள்ளது. தேசிய தலைநகர் டெல்லி மற்றும் என்சிஆர் ஆகிய இடங்களில் வெள்ளம் சூழ்ந்த சாலைகள் மற்றும் மழையால் மரங்கள் முறிந்து விழுந்து , நீண்ட போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன.
அந்த வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. உத்தரகாண்ட் மாநிலத்திலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை இப்பகுதியில் பெய்த கனமழையால் பெரிய மலை ஒன்று இடிந்து விழுந்தது. அதனால் நஜாங் தம்பா கிராமத்திற்கு அருகே நிலச்சரிவு ஏற்ப்பட்டது. இதில் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால், உள்ளூர் மக்களுடன் குறைந்தது 40 சுற்றுலா பயணிகளும் தவாகாட் அருகே சிக்கித் தவித்து வருகின்றனர்.
இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி "உத்தரகாண்ட் மாநிலத்தில் செப்டம்பர் 23 முதல் 25 வரை மிகக் கனமழைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மேற்கு உ.பி.யில் மழை அதிகரிக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நாமக்கல், சேலம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவை ஆகிய 28 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.