இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். ரயில் பயணங்களில் ஏற்படும் சிக்கல்களை தடுக்கவும், பெரும்பாலும் போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.
கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் நீண்டநாள் கனவாக இருந்து வந்த மெட்ரோ ரயில் திட்டம் முக்கிய முன்னேற்றம் கண்டுள்ளது. மாநில அமைச்சரவை திருவனந்தபுரம் மெட்ரோ திட்டத்தின் பாதை ஒழுங்கமைப்புக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் திட்டத்தின் முதல் கட்ட பணிகள் விரைவில் துவங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ பாதை பப்பானம் கோடு பகுதியில் தொடங்கி, வழியாக கிழக்கு புறநகரங்கள், தாம்பனூர் மையப்பகுதி, மெடிக்கல் கல்லூரி, காழக்கோட்டை IT காரிடார், திருவனந்தபுரம் சர்வதேச விமானநிலையம் மற்றும் எஞ்சக்கல் வரை செல்லும். இந்தப் பாதை நகரின் முக்கிய கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் ஐடி நிறுவனங்களை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை ஒப்புதல் பெற்றதுடன், மெட்ரோ ரயில் திட்டத்தின் அடுத்த கட்ட விரிவாக்கப் பகுதிகளும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டத்தில் மெட்ரோ சேவை நெய்யாட்டின்கரை, அட்டிங்கல் மற்றும் விழிஞ்ஞம் துறைமுகம் வரை நீட்டிக்கப்படும். இதன் மூலம் நகரத்தைச் சுற்றியுள்ள முக்கிய புறநகரப் பகுதிகளும் மெட்ரோ இணைப்பைப் பெறும். மெட்ரோ ரயிலின் முதல் கட்டம் 31 கிலோமீட்டர் நீளத்தில் பப்பானம் கோடு – தாம்பனூர் – மெடிக்கல் கல்லூரி – காழக்கோட்டை – விமானநிலையம் – எஞ்சக்கல் வழியாக செல்லும். இதற்குள் மொத்தம் 27 மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்படும். இது முழுக்க நகரத்தின் முக்கிய வணிக, கல்வி மற்றும் போக்குவரத்து மையங்களை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. தாம்பனூர் ரயில் நிலையம், KSRTC பஸ் நிலையம் மற்றும் மெட்ரோ நிலையம் ஒரே வளாகத்தில் ஒருங்கிணைக்கப்படும் வகையில் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் ஒரே இடத்தில் பல்வேறு போக்குவரத்து வசதிகளைப் பெற முடியும்.
முதற்கட்டமாக பப்பானம் கோடு முதல் காழக்கோட்டை வரை பணிகள் துவங்கவுள்ளன. இதற்கான விவரமான திட்ட அறிக்கை மத்திய நகர வளர்ச்சி அமைச்சகத்துக்கும் அனுப்பப்படும். மத்திய அரசின் ஒப்புதலுடன், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி பெறப்படும் என கூறப்படுகிறது.
திருவனந்தபுரம் நகரம் தற்போது தினசரி அதிக போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகிறது. குறிப்பாக தாம்பனூர், பாங்கோடு, காழக்கோட்டை பகுதிகளில் வாகன போக்குவரத்து மிகுந்துள்ளது. மெட்ரோ ரயில் துவங்கியவுடன் நகரின் போக்குவரத்து சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெட்ரோ திட்டத்தின் மூலம் கேரளத்தின் தென்பகுதியில் உள்ள தொழில்நுட்ப மையங்கள், சுற்றுலா துறைமுகங்கள், மற்றும் விமான நிலையம் ஒருங்கிணைக்கப்படும். இது திருவனந்தபுரத்தை ஒரு மல்டி- மாடல்போக்குவரத்து மையமாக மாற்றும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.