மத்தியப் பிரதேசத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு பட்டதாரி இளைஞர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தூரில் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) வளாகம் உள்ளே கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைந்துள்ளது.


மத்திய பிரதேசத்தில் பரபரப்பு: இந்த பள்ளியில் வேலைக்கு விண்ணப்பித்த பிறகும், வேலை கிடைக்காத காரணத்தால் அந்த இளைஞர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். சேத்தன் சோனி (30) என்ற இளைஞர், கணினி பயன்பாடுகளில் முதுகலை (எம்சிஏ) பட்டம் பெற்றவர்.


மத்திய அரசு நடத்தும் பள்ளியான கேந்திரிய வித்யாலயாவில் தொழில்நுட்ப வல்லுநர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவருக்கு அந்த வேலை கிடைக்கவில்லை. சோனி, தனது படிப்பை 2015இல் முடித்துள்ளார்.


ஆனால், பல முயற்சிகளை மேற்கொண்ட பிறகும், அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இது அவரை விரக்தியடையச் செய்தது. வேலை கிடைக்காத விரக்தியில், கடந்த மாதம் ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வருக்கு இ-மெயில் மூலம் பள்ளியை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்தார்.


வேலை கிடைக்காத காரணத்தால் இளைஞர் செய்த காரியம்:


வரும் சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15ஆம் தேதி) பள்ளியை தகர்க்க செய்ய போவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சோனியை கைது செய்ய காலல்துறை அதிகாரிகள் தேடுதல் வேட்டை நடத்தினர்.


இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், "இந்த வழக்கு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்" என்றார்.


இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருவதாக அதிர்ச்சி தரவுகள் வெளியாகி வருகின்றன. கடந்த 2022 ஆம் ஆண்டு, டிசம்பரில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் முந்தைய மாதம் பதிவான 8 சதவீதத்தில் இருந்து 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு 8.30 சதவீதமாக அதிகரித்துள்ளது.


நகர்ப்புற வேலையின்மை விகிதம் டிசம்பரில் பதிவான 8.96 சதவீதத்தில் இருந்து 10.09 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கிராமப்புற வேலையின்மை விகிதம் 7.55 சதவீதத்தில் இருந்து 7.44 சதவீதமாக சரிந்தது.


அதிக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதும், பணி சந்தையில் நுழையும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு மிக பெரிய சவாலாக உள்ளது.