மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் குழந்தைகளே பெற்றோருக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, குழந்தைகள் சொன்ன காரணம் அனைவரையும் வியப்பில் ஆழத்தியுள்ளது.


பெற்றோருக்கு எதிராக குழந்தைகள் புகார் கொடுக்க காரணம் என்ன? அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதற்காகவும் தொலைக்காட்சி பார்த்ததற்காகவும் 21 வயது மகளையும் 8 வயது மகனையும் பெற்றோர் திட்டியுள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், சந்தன் நகர் காவல்நிலையத்திற்கு சென்ற குழந்தைகள், தங்கள் பெற்றோருக்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.


அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதற்காக தங்களை பெற்றோர் அடித்ததாகவும் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்தது மட்டுமின்றி, ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய கடுமையான பிரிவுகளை பெற்றோர் மீது பதிவு செய்தனர்,.


இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 323 (காயப்படுத்துதல்), 342 (அடைத்து வைத்தது), 294 (ஆபாசமான வார்த்தைகளை பேசுதல்), 506 (மிரட்டுதல்), 75 (குழந்தைக்கு கொடுமை) மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதா காவல்துறை? பெற்றோர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தர்மேந்திர சவுத்ரி, வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதாக தெரிவித்தார்.


இயல்பான பெற்றோரை போலவே நடந்து கொண்டதாகவும் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தும் குழந்தைகளிடம் பெற்றோர் எப்படி நடந்து கொள்வார்களோ அப்படிதான், தாங்களும் நடந்து கொண்டதாக பெற்றோர் விளக்கம் அளித்தனர்.


போலீசார் தங்கள் தரப்பை கருத்தில் கொள்ளாமல் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதாகவும் குழந்தைகளின் மொபைல், டி.வி., பழக்கத்தால், ஒவ்வொரு வீட்டிலும் சிரமம் ஏற்படுகிறது என்றும் பெற்றோர் நீதிமன்றத்தில் வாதிட்டனர். குழந்தைகளை திட்டுவது சாதாரண விஷயம் என்றும் இது எல்லா வீட்டிலும் நடக்கும் என தெரிவித்தனர்.


தங்கள் பெற்றோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததால், குழந்தைகள் தங்கள் தந்தைவழி அத்தையுடன் வசித்து வருகின்றனர். ஆனால், தந்தைக்கும், அவரது சகோதரிக்கும் இடையே தகராறு இருப்பதால் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது.