விஸ்மயா நாயர் (22). கடந்த மூன்று நாட்களாக இந்தியா முழுவதும் அதிகம் பேசப்படும் பெயர். வரதட்சணைக் கொடுமையால் கணவர் வீட்டில் மர்மமான இறந்துகிடந்த இளம்பெண்தான் இவர். இவரது இறப்பு, கேரளாவில் நடைபெறும் வரதட்சணைக் கொடுமை சம்பவங்களை வெளிச்சத்துக் கொண்டுவரத் தொடங்கியுள்ளது.


இந்நிலையில் தனியார் டிஜிட்டல் தளம் ஒன்று, வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் நேரலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


அதில் சிறப்பு விருந்தினராக கேரள மாநிலம் மகளிர் ஆணையத் தலைவர் எம்.சி.ஜோஸ்பின் கலந்து கொண்டார். எர்ணாகுளம் மாவாட்டத்திலிருந்து பெண் ஒருவர் நேரலையில் இருந்த ஜோஸ்பினைத் தொடர்பு கொண்டார். அப்போது அந்தப் பெண், எனது கணவரும், மாமியார், மாமனாரும் என்னைக் கொடுமைப் படுத்துகின்றனர் எனப் புகாரளித்தார். அதற்கு ஜோஸ்பின் இது குறித்து போலீஸில் புகார் கொடுத்திருக்கிறீர்களா எனக் வினவுகிறார். அதற்கு அந்தப் பெண், இல்லை இதுவரை இதை நான் யாரிடமும் சொல்லியதே இல்லை எனக் கூற, உடனே ஜோஸ்பின், அப்படியென்றால் அனுபவியுங்கள் என்று கடுமையான குரலில் கூறினார். எர்ணாகுளம் பெண்ணிடம் மட்டுமல்ல, தன்னிடம் நேரலையில் பேசிய அனைத்துப் பெண்களுடனும் அவர் சிடுசிடு என்றுதான் பேசினார். சில பெண்களிடம், நீங்கள் வழக்கறிஞரை ஏற்பாடு செய்துகொண்டு குடும்பநல நீதிமன்றங்களை அணுகுங்கள் எனக் கூறினார்.


இன்னொரு பெண்ணிடம், உங்களுக்கு கணவருடன் வாழப் பிடிக்கவில்லை என்றால் குடும்பநல நீதிமன்றத்துக்கு போங்கள். அங்குதான் உங்களுக்கான இழப்பீட்டை பெற வழிவகை கிடைக்கும் என்றார்.


பெண்களால்தான் பிரச்சினை:


இதெல்லாம் கூட பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு இன்னொரு பெண்ணிடம் அவர் பேசிய விதம் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.


"நீங்கள் முட்டாள்தனமாக நடந்து கொண்டிருக்கிறீர்கள். ஒருமுறை உங்கள் கணவரைப் பிரிந்துவந்த நீங்கள், எதற்காக மீண்டும் அவரிடம் சென்றீர்கள். அப்படித் திரும்பிச் சென்றதே தவறு. அதற்குப் பின்னர் ஒரு குழந்தை வேறு பெற்றுள்ளீர்கள். பெண்கள் தான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம்" என்று அந்தப் பெண்ணிடம் கூறினார். இடையே குறுக்கிட முயன்ற அந்தப் பெண்ணை நிறுத்துங்கள் நீங்களாகவே பேசிக்கொண்டு செல்லமுடியாது என்றும் கண்டித்தார்.


கட்சிகள் கண்டனம்:


ஜோஸ்பினின் பேச்சு சலசலப்புகளை ஏற்படுத்த, அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் மழுப்பலாகப் பதிலளித்தார். நான் யாரையும் அவதூறாகப் பேசவில்லை. என்னிடம் பிரச்சனையைக் கூறிய பெண்களிடம் போலீஸையும், வழக்கறிஞரையும் அணுகுமாறு அறிவுரை மட்டுமே கூறினேன் என்று கூறினார். ஆனால், மகளிர் ஆணையத் தலைவர் ஜோஸ்பின் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டதாகக் கூறும் எதிர்க்கட்சியினர் அவர் அந்தப் பதிவியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றனர். கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஷஃபி பரம்பில் கூறுகையில், ஜோஸ்பினை மகளிர் நலனுக்கு எதிரான கமிஷன் உருவாக்கி அதன் தலைவராக்க வேண்டும் என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான ஸ்ரீமதி கூறுகையில், ஜோஸ்பின் தனது பேச்சுக்கு உரிய விளக்கமளிக்க வேண்டும் என்றார். இவ்வாறாக ஜோஸ்பினின் பேச்சுக்கு நாடு முழுவதும் கண்டனக் குரல் வலுத்துவருகிறது.


இலவச ஹெல்ப்லைன்:


தமிழகத்தில், குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்களுக்கு, தொலைபேசி வழியாக உளவியல் ஆலோசனை, மருத்துவ உதவி, குறுகிய கால தங்கும் வசதி, உணவு மற்றும் சட்ட உதவிகளை, மாவட்ட நிர்வாகங்கள் வழியே, சமூக நலத்துறை வழங்கி வருகிறது. பாதிக்கப்படும் பெண்கள், உதவி எண்களான, 181; காவல் துறை உதவி எண், 1091, 112 ஆகியவற்றில் புகார் தெரிவிக்கலாம்.