மணிப்பூரில் பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்ற சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியின் வீட்டை பெண்கள் அடித்து நொறுக்கி தீவைத்து எரித்தனர். 






மணிப்பூரில் குக்கி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த  இரண்டு பெண்களை, மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் நடுரோட்டில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. அதில் இரண்டு பழங்குடியின பெண்களை நிர்வாணமாக இழுத்துச் செல்வது போன்ற வீடியோ வெளியானது. மேலும், அவர்களை அந்த கும்பல் வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.  இந்த சம்பவம் மணிப்பூர்  தலைநகர் இம்பாலில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காங்கபோக்பி மாவட்டத்தில் இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. 


ஆனால் இந்த கொடூர சம்பவம் மே 4ஆம் தேதி நடந்ததாகவும் அதன் வீடியோ தற்போது வைரலாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு முதலமைச்சர் பிரேன் சிங் உத்தரவிட்டுள்ளார்.  இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, தற்போது வரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளை தேடும் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கொடூரத்தை செய்ததில் முக்கிய குற்றவாளியான மெய்தி இனத்தை சேர்ந்த ஹேராதாஸ் என்பவரின் வீட்டை குகி இனத்தை சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து அடித்து நொறுக்கினர். அத்துடன் அவரது வீட்டை தீவைத்து எரித்தனர். ஹெராதாஸ் செய்த செயல் ஒட்டுமொத்த பெண் இனத்தையே இழிவுபடுத்தும் செயல் என்பதால் பெண்கள் இந்த செயலில் ஈடுபட்டனர். பெண்கள் வீட்டை அடித்து நொறுக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.  


மெய்தி சமூகத்தினரின் நீண்ட நாள் கோரிக்கைக்கு எதிராக பழங்குடியினர் ஒற்றுமை பேரணி மே 3 ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் வெடித்த வன்முறைதான் தற்போது வரை நீடிக்கும் கலவரத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இரண்டு மாதங்களாக தொடர்ந்து வரும் கலவரத்தால் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தங்கள் சொந்த ஊரிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.