கைக்கு எட்டுமா மாற்றுத்திறனாளிக்கு சமூக நீதி!!!
சமூகநீதி என்பது பொதுவழிச் சமூகத்தில்,ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பங்கெடுப்பும், பங்கெடுப்பிற்கு ஏற்ப வழங்கப்படும் வாய்ப்புகள் மற்றும் வளங்களின் பங்கீட்டு ஏற்றத்தாழ்வுகளை, சமன்பாட்டை நோக்கி நகர்த்துதல் எனில், மாற்றுத்திறனாளிகளின் சமூக பங்கெடுப்பு நிலை எத்தகையதாக உள்ளது என்பதை அறிதலில்தான் எங்கள் வலி பொது சமூகத்திற்கு புரியும்!
குடும்ப நிகழ்ச்சிகளில் கூட நேர்முகமாகவே ஒதுக்கப்படும் அவலம் இன்னும் இருந்துகொண்டுள்ளது என்பதுதான் நிதர்சனம். குடும்பங்களிலேயே நிராகரிப்பும், ஒதுக்குதலும் இருப்பது உண்மையென்றால், சமூக பங்கெடுப்பென்பது தூரத்தில் காணப்படும் அழகு நிலவைப் போன்றதான காட்சியாகவே கரைந்துபோகிறது.
சமூக பங்கெடுப்பில், அதன் கட்டமைப்பு ஏற்படுத்தும் சவால்களில், எது குறைந்துள்ளது? மனக்கட்டமைப்பின் சவால்கள் எம்மக்களை அன்றாடம் மனவெதும்பல்களில் வைத்திருக்கிறது. "ஊன்றி நடக்கும் போது வலிக்கவில்லை, நீ உற்றுpபார்க்கும் போது வலித்தது " என்ற வரிகள் இன்னும் புரியவில்லை? கைகளில் கட்டை வைத்துநடக்கும் தோள்களின் வலிக்கும், யாரும் பார்க்காதபோது நம் மாற்றுத்திறன் மகளிரின் கண்கள் வியர்த்து, அழுது, கண்ணீர்த்துளிகளினால் நனைந்த தலையணைகளுக்குத்தான் அது தெரியும், அது புரியும்.
ஒன்று சொல்லட்டுமா? மாற்றுத்திறனாளி பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை அவர்களாலும் சொல்லமுடியவில்லை, நமக்கும் இதையெல்லாம் கேட்க நேரமும் இல்லை!! இதில் காது கேட்க முடியாத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்கள் தாங்கள் படும்பாட்டை சொல்லமுடியாமல் இயற்கை செய்யும் சதி இருக்கிறதே!! ஐயோ உங்களுக்கு எப்படி புரியவைப்பேன்.. அது சரி அயனாவரம் சம்பவத்தோடு அயர்ந்து உறங்கிவிட்ட சமூகம்தானே நாம்!!
சரி வாய்ப்புகளுக்கு வருவோம்!
படித்து வேலைவாய்ப்பு கிடைக்காத மாற்றுத்திறனாளிகள் நிலையின் கொடூரம் மாறிவிட்டதா? எம்.ஃபில் படித்து இஞ்சி மரப்பாவை விற்றுக்கொண்டிருக்கும் பார்வையற்ற சகோதரர்களின் வலி புரியுமா இச்சமூகத்துக்கு? வேலை கொடு! சமூகமே, என் அறிவை தீட்டிவைத்திருக்கிறேன், உழைக்க காத்திருக்கிறேன் என்று கேட்ட மாற்றுத்திறனாளிகளை சுடுகாட்டில், இரவு கொண்டு போய்விட்டது எங்களின் ஊனமா? இல்லை இந்த சமூகத்தின் ஊனமா? ஒரு பெட்டிக்கடை போட்டு பிழைப்பு நடத்துவதற்கு கூட நீதிமன்றத்தை நாடவேண்டும்!! தவறு, தவறு. அது நீதிமன்றமல்ல வழக்காடுமன்றம்! வழக்காடுவதற்கு நிதி? உழக்கு அரிசிக்கு போராடும் மாற்றுத்திறனாளி சமூகத்திடம் ஏது ஐயா/அம்மா நிதி?
"இன்பம் என்ற சொல்லை நாங்கள் கேட்டதுண்டு. அது என் இல்லத்தின் பக்கம் வந்ததே இல்லை என்பது எத்தனை நிதர்சனம் எங்கள் வாழ்வில்" பெட்டிக்கடை வைப்பதற்கே இத்தனை பாடுகள் என்றால், வங்கிக்கடன் பெறுவதின் சிரமத்தை நான் உங்களுக்கு சொல்லவா வேண்டும்?
மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளை கொன்று தங்களையும் மாய்த்துக்கொண்ட குடும்பங்களின் செய்தியை படித்துவிட்டு, உச்சுக்கொட்டிய சமூகமே!! பெற்ற குழந்தையை காப்பாற்ற முடியாமல் கொல்லும்போது அந்த தாய்தந்தையின் வலி எப்படி இருந்திருக்கும், உங்களுக்கு புரியவில்லையா? இல்லை புரிந்தும் புரியாமல் நடிக்கிறதா இந்த சமூகம்?
கழிவறை வாய்ப்பு?
அறத்தின் தமிழ் சமூகமே , சிறுநீர் முட்டும்போது, செயலிழந்த கால்கள், மேலும் செயலிழந்து ,எங்கள் கைகட்டையினை வேகமாக எடுத்து நடக்கமுடியாமல் தடுமாறி, மாடியின் படியிறங்கி அல்லது மேலேறி, சாய்வுதளம் இல்லாத அந்த கழிவறையில் தட்டுத்தடுமாறி சிறுநீர் கழிக்கும் முன் என் கால்சட்டையில் வழிந்த சிறுநீரை மற்றவர் பார்வைபடாமல் மறைத்து வைக்க நாங்கள் படும்பாடு என்னவென்று நீங்கள் அறிய வாய்ப்பில்லைதான். ஏனெனில், உங்களுக்கு கழிவறை மட்டுமல்ல. ஓய்வறை கூட எளிதாக கிடைத்துவிடுகிறது!! ஆனால் கழிவறை வாய்ப்புக்கூட மறுக்கப்பட்ட சமூகம்தான் மாற்றுத்திறனாளிகள் சமூகம்.
தெருவில் நின்று போராடுவதும், சட்டமன்றத்தில் போராடுவதும் வெவ்வேறு!!! முச்சந்தியில் குரல்கொடுப்பதும், முனிசிபாலிட்டி கூட்டத்தில் குரல் கொடுப்பதும் ஒன்றல்ல.....
இச்சமூகத்தின் வளங்களில், வாய்ப்புகளில் பங்குகேட்பதற்காக இட ஒதுக்கீடு கேட்கவில்லை. எங்கள் வலிகளை பற்றி பேசுவதற்காக ,புரியவைப்பதற்காக இடம் கேட்கிறோம்! உலகில் மனிதன் பேசிய முதல் மொழி - சைகை மொழி!!! அதை நாங்கள்தான் பாதுகாத்து வருகிறோம், எங்கள் சைகை மொழியையும் சேர்த்து மும்மொழி கொள்கையாக கொண்டாடுங்கள் என்று புரியவைக்க இடம் கேட்கிறோம், கருத்து சுதந்திரம் பேசும் சமூகத்தில் எங்கள் கருத்துக்களை வைக்க சைகை மொழி முக்கியம், சைகை மொழி வேண்டும், சைகை மொழி இல்லாமல் எங்கள் கருத்தே இல்லை என்று சமூக நீதி கேட்கிறோம்.
வேட்டையாடப்பட்ட சிங்கம் எழுந்து பேசாதவரை வேட்டையாடிய வேடவனின் கருத்துதான் மேலோங்கி நிற்கும். நாங்கள் வேட்டையாடப்பட்ட சிங்கமாகத்தான் இருக்கிறோம்!! ஒரு பாட்டு நினைவுக்கு வருகிறது " தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும், தரத்தினில் குறைவதுண்டோ!! எங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அன்பு குறைவதுண்டோ!!!
அன்பாக கேட்கிறோம், இப்போது சொல்லுங்கள். அரசியல் இடஒதுக்கீட்டு கோரிக்கை சமூகநீதியல்லாமல் வேறென்ன? பிறப்பொக்கும் எல்லா உயிர்கும்!!!! - சமூக நீதியின் தொடக்கம் அதுதான்!!
- பேராசிரியர் தீபக், டிசம்பர் 3 இயக்கம்