தமிழகத்தின் துாத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை, 22 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. ஆலை அமைந்துள்ள பகுதிகளில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர்.


உச்ச நீதிமன்றம் தீர்ப்பு:


கடந்த 2018ம் ஆண்டு மே 22ல் நடந்த போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து வேதாந்த நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


அந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வில் விசாரணை நடத்தப்பட்ட வந்த நிலையில்,  இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.


விசாரணையின்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்திய நாதன் எழுத்து மூலமான வாதங்களை தாக்கல் செய்தார். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால், "20 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச் சுழல் மாசை ஏற்படுத்தி வருகிறது.


வாதங்கள் என்ன?


அதனால் தான் 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மாசு மட்டுமல்லாமல் சல்பர் டை ஆக்சைடு கசிவு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆலையால் கொட்டப்பட்ட கழிவுகளால் தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் பயன்பாட்டு நீரில் இந்தக் கழிவுகள் கலந்துள்ளது உறுதியாகியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி பகுதிகளில் காற்று மாசு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது” என்றனர். 


இதனை தொடர்ந்து, வேதாந்தா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் திவான், "20 ஆண்டுகளாக அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு கூறுவதை ஏற்க முடியாது” என்றார். இதனை அடுத்து, "ஜிப்சம் மற்றும் காப்பர் ஸ்லாக்குகளை என்ன செய்தீர்கள்? அவற்றை கொட்டுவதற்கை 11 இடங்கள் வைத்துள்ளீர்கள் ஆனால் நீங்கள் முறையாக கழிவுகளை கையாளவில்லையே?” என்ற தலைமை நீதிபதி கேட்டார்.  


”ஜிப்சம் கழிவுகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது"


இதற்கு வேந்தா தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், "ஜிப்சம் விவகாரத்தில் வழக்கு இன்னும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தங்கள் இடத்தில் கொட்டப்பட்ட கழிவுகளை நீக்க வேண்டாம் என அந்த இடத்திற்கு சொந்தமானவர்கள் சிலர் கூறினர். அதனால் இந்த வழக்கு உத்தரவுக்கு நிலுவையில் உள்ளது.


ஜிப்சம் கொட்டப்படும் இடத்தில் போதிய பாதுகாப்புகள் உள்ளது. டிரக்குகள் மூலமாக இவை இடமாற்றம் செய்யப்படும். Ramco, தமிழ்நாடு சிமெண்ட்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுக்காக இந்த ஜிப்சம் கழிவுகள் வழங்கப்படுகிறது. உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் முன்வைத்துள்ளது.


ஜிப்சம் கொட்டப்படுவது குறித்த குற்றச்சாட்டுக்கள் ஏற்புடையதல்ல. இந்த ஜிப்சம் கழிவுகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆலையையில் இருந்து வாயு கசிந்ததை மறுக்கவில்லை, ஆனால் அதனை முழுவதுமாக கட்டுப்படுத்தி எந்த சுற்றுசூழல் கேடும் நடக்காமல் தடுத்தோம்.  அதேபோல ஆலையிலிருந்து வாயு கசிவால் காற்று மாசு ஏற்பட்டது, பாதிப்பு ஏற்பட்டது என்று எந்த ஆதார ஆவணமும் இல்லை" என்றார். 


"ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது”


இருதரப்பு வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் தவறு உள்ளது என்ற ஆலையின் வாதத்தை ஏற்க முடியாது என்று கூறினார். தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தின் முடிவில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. ஆலையால் செய்யப்பட விதிமுறை மீறல்கள் அடிப்படையில் உயர்நீதிமன்றம் மற்றும் அரசால் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது.  


மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தனது கடைமையை செய்ய தவறி விட்டது.தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்திய சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் காப்பர் கழிவுகளை கையாண்ட முறை மிகவும் கவலைக்குரியது. 2013 முதல் உச்ச நீதிமன்றம் பல வாய்ப்புகளை கொடுத்தும் கழிவுகளை அகற்ற ஸ்டெர்லைட் தவறிவிட்டது.


ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தி வந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள மக்களுடைய சுகாதாரம் மிக முக்கியமானது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது” என்று கூறிய தலைமை நீதிபதி, மேற்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.