காஞ்சன் சவுத்ரி பட்டாச்சாரியா


கிரண்பேடிக்கு பிறகு இந்தியாவின் இரண்டாவது பெண் ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்றவர் காஞ்சன் சவுத்ரி பட்டாச்சாரியா. இந்தியாவிலேயே காவல்துறை இயக்குநர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற முதல் பெண் காஞ்சன் சவுத்ரி பட்டாச்சாரியா ஆவார். உத்ரகண்ட் மாநிலத்தின் முதல் பெண் டிஜிபி ஆகவும், உத்தரபிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாகவும் இருந்து பெரும் காஞ்சன் சவுத்ரி பட்டாச்சாரியாவுக்கு உண்டு.



இவரின் காவல்துறை சேவையை பாராட்டி 1989ஆம் ஆண்டில் சிறப்பு சேவைக்கான விருதும், 1997ஆம் ஆண்டில் ஜனாதிபதி பதக்கமும், 2004 ஆம் ஆண்டில் பெண் சாதனையாளரின் செயல்திறனுக்கான ராஜீவ் காந்தி விருதும் இவருக்கு அளிக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டு மெக்ஸிக்கோவின் கான்கனில் நடைபெற்ற இண்டர்போல் மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக காஞ்சன் சவுத்ரி பட்டாச்சாரியா அனுப்பப்பட்டார்.


தேசிய அளவில் நடந்த இரண்டாவது காவல்துறை மாநாட்டை பொறுப்பேற்று நடத்தியதால் ஜனாதிபதியின் பாராட்டை பெற்ற இவர், ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் டிஜிபிக்கள் கூட்டத்தில் காவல்துறையில் பெண்களை சேர்த்தல், பயிற்சி அளித்தல், தொடர்பான பிரச்னைகள் பற்றியும் ஆய்வு செய்துள்ளார், காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் தலைவராகவும் பங்காற்றிய இவர். கடந்த 2007ஆம் ஆண்டு அக்டோபார் மாதம் தனது பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார். தொடர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டில் தனது 72ஆவது வயதில் காஞ்சன் சவுத்ரி பட்டாச்சாரியா காலமானார். இவரின் காவல்துறை பங்களிப்பு ஐபிஎஸ் பொறுப்புக்கு வர நினைக்கும் பெண்களுக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது


விமல் மேஹாரா


டெல்லி காவல்துறை வரலாற்றில் முதன்முறையாக உருவாக்கப்பட்ட பெண்கள் காவல் பிரிவுக்கான உதவி ஆணையராக நியமிக்கப்பட்டவர் விமல் மேஹாரா. கிரண்பேடி ஐபிஎஸிற்கு பிறகு டெல்லியில் உள்ள திகார் சிறையின் இரண்டாவது பெண் இயக்குநர் ஜெனரலாக பொறுப்பேற்ற மேஹாரா, சிறையில் உள்ள பெண்கள் சீர்த்திருத்தத்தில் தனிக்கவனம் செலுத்தினார். பெண் கைதிகளுக்கு வெளிநாட்டு மொழிகளை கற்றுத்தரும் பயிற்சி வகுப்புகளையும் திகார் சிறையில் ஏற்பாடு செய்தார்.



டெல்லியில் மகளிருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த நிலையில் அதனை தடுக்கும் விதமாக 1091 என்ற புகார் உதவி எண்ணை அறிவித்ததுடன் பெண்கள் பாதுகாப்பிற்காக தற்காப்பு பயிற்சி வகுப்புகளையும் அறிமுகப்படுத்தினார். டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த இவர் மேற்கொண்ட முயற்சிகள் பலரது பாராட்டை பெற்றது.


அர்ச்சனா ராமசுந்தரம்


தமிழ்நாடு காவல்பிரிவில் பணியாற்றிய அர்ச்சனா ராமசுந்தரம் தனது 37ஆண்டுகால பணிக்கு பிறகு கடந்த 2018ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். மத்திய துணை ராணுவ படைக்கு தலைமை தாங்கிய இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெயரை பெற்ற அர்ச்சனா ராமசுந்தரம், 1980ஆம் ஆண்டு பிரிவுக்கான ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். அதற்கு முன்னதாக ராஜஸ்தான் பல்கலைக்கழத்தில் பொருளாதாரம் முடித்து விரிவுரையாளராக பணியாற்றி வந்தார்.



தமிழ்நாட்டின் மதுவிலக்கு தடுப்பு மற்றும் அமலாக்கப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக இவர் இருந்தபோது சட்டவிரோத மது தயாரிப்பதிலும் மது விற்பனையிலும் ஈடுபட்ட ஏராளமானோரை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். பின்னர் ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு பிரிவின் கண்காணிப்பாளராகவும் அர்ச்சனா ராமசுந்தரம் இருந்தார்.


1995-ஆம் ஆண்டில் சிறப்பு சேவைக்கான காவல் பதக்கமும், 2005-ஆம் ஆண்டில் ஜனாதிபதி பதக்கமும் இவரது காவல்பணியை பாராட்டி வழங்கப்பட்டது. 1999-ஆம் ஆண்டில் மத்திய பணிக்கு சென்ற இவர், புதுடெல்லியில் உள்ள மத்திய புலனாய்வு அமைப்பில் டிஐஜியாக பணியாற்றினார்.


பி சந்தியா


கேரளாவின் கூடுதல் இயக்குநர் ஜெனராலான சந்தியா ஆஸ்திரேலியாவின் வொல்லோங்க் பல்கலைக்கழகத்தில் மனிதவள மேலாண்மை துறையில் பட்டமும் 1998-ஆம் ஆண்டில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் PGDBA-வும் முடித்தவர். 2006-ஆம் ஆண்டில் கேரளாவை உலுக்கிய முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப்பிற்கு எதிரான பாலியல் குற்ற விசாரணையை நடத்தியதில் சந்தியாவிற்கு முக்கிய பங்குண்டு. அதே ஆண்டில் இவருக்கு ஜனாதிபதி பதக்கமும் வழங்கி இவரது சேவைக்கு கவுரவம் அளிக்கப்பட்டது.



2007-ஆம் ஆண்டில் கேரளாவில் ஜனமைத்ரி சுரக்‌ஷா என்ற சமுதாய காவல் அமைப்பை ஏற்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தினார் சந்தியா. 2010-ஆம் ஆண்டில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் IAWP அமைப்பு சர்வதேச விருதை அளித்து பாராட்டியது.  ’’நீலக்கோட்டுவேலியூடே’ என்ற இவரது நாவல் 2007ஆம் ஆண்டுக்கான எடச்சேரி விருதினையும், கோபால கிருஷ்ண கோலாடு விருதினையும், அபுதாபி சக்தி விருது மற்றும் குஞ்சுன்னி புராஸ்கரம் விருதையும் பெற்றது