நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், குஜராத்தில் உள்ள பள்ளியில் வகுப்பறையின் சுவர் இடிந்து விழுந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தென்மேற்கு பருவமழையால் மஹாராஷ்டிரா, டெல்லி, குஜராத், நாக்பூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சில பகுதிகளில் நிலச்சரிவு, கட்டிடங்கள் இடிந்து விழும் சோக சம்பவங்கள் நடந்துள்ளன.அப்படி குஜராத்தில் உள்ள வடோதரா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றின் சுவர் திடீரென இடிந்து விழுந்த விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 






இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் ருபால் ஷா தெரிவிக்கையில்,” திடீரென பெரும் சத்தம் கேட்டது. சத்தம் வந்த பகுதியை நோக்கி சென்றோம். அப்போது வகுப்பறையின் சுவர் இடிந்து விழுந்திருந்து. மாணவர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டிருந்தது. உடனடியாக அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றோம்.” என்று தெரிவித்தார். 


இந்த விபத்து நடந்தது தெரிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். வகுப்பறையின் சுவர் இடிந்து விழுந்தபோது கீழே மாணவர்கள் யாரும் இல்லாததால் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் மாணவர்களின் மிதிவண்டிகள் நின்றிருந்த இடத்திற்கு மேலெயிருந்த சுவர் இடிந்து விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு மாணவர்கள் காயமடைந்ததாகவும் யாருக்கும் தீவிர காயம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த மாணவர்கள் அருகில் உள்ள மருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. 


இந்த விபத்துக் காட்சிகள் வகுப்பறையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.