ஆஸ்திரேலியாவில் கோயில்கள் மீது  தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக அந்த நாட்டு பிரதமர் ஆண்டனி அல்பானீஸிடம் (Anthony Albanese)  பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்தார். இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதே தங்களின் முதன்மையான நோக்கமாகும் என்று தெரிவித்துள்ளதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.

Continues below advertisement


ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் நான்கு நாள் பயணமாக கடந்த 8-ம் தேதி இந்தியா வந்தார். முதல் நாளில் குஜராத் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்ட அவர், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஹோலி பண்டிகையிலும் பங்கேற்றார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளின் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் உடன் இருந்தனர். இதை தொடர்ந்து இரு நாட்டு பிரதமர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். 




பார்டர் - கவாஸ்கர் போட்டி 


அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா-  ஆஸ்திரேலியா  டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பிரதமர் மோடியும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி இருவரும் பார்த்து ரசித்தனர்.


புதிய ஒப்பந்தங்கள் 


 டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் வர்த்தகம், பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.  சூரிய மின் சக்தி, விளையாட்டு உள்ளிட்ட துறைகள் தொடர்பாக இந்தியா -ஆஸ்திரேலியா இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 


ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள் தாக்குதல் 


ஆஸ்திரேலியாவில் அண்மைகாலமாக இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வருகிறது.  இந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமரிடம்  பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.


ஆஸ்திரேலியாவில் கோயில்கள் தாக்கப்படுவது குறித்து செய்தியாளரிடம் பதில் அளித்த பிரதமர் ஆண்டடி அல்பனீஸ் தெரிவித்ததன் விவரம்:


“ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியினர் அமைதியாக வாழ்கின்றனர். எங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு அதிகம். இந்து கோயில்கள், இந்திய வம்சாவளியினரின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்த்வம், முன்னுரிமை அளிக்கப்படும்" என்று தெரிவித்தார்.


ஆஸ்திரேலியாவில் மத சார்ந்த நிறுவனங்கள் மேல் நடக்கும் தாக்குதல்களை அரசு ஒருபோதும் ஆதரிக்காது என்றும், குறிப்பாக இந்து கோயில்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்களை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 


ஆஸ்திரேலியாவில் மக்கள் தங்கள் வாழ்வில் முன்னெடும் நம்பிக்கைகளை மதிக்கிறோம். அவரவர் தங்களுக்கான நம்பிக்கை தொடர்பானவைகளை பின்பற்றலாம். தேவாலயங்கள், மசூதிகள், இந்து கோயில்கள் என எதன் மீது தாக்குதல் நடத்துவதும் தவறானது. அதை தடுப்பதே அரசின் நோக்கமாகும்.பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறை மூலம் வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடப்பதை தடுக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.


இந்தியா, ஆஸ்திரேலியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்கெனவே உள்ளது. இதை மேலும் மேம்படுத்த இந்த ஆண்டு டிசம்பருக்குள் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகும். ரஷ்யாவுடன் நட்பு பாராட்டுவது இந்தியாவின் தனிப்பட்ட கொள்கை. எங்களைப் பொறுத்தவரை இந்தியா மிகவும் நம்பகமான நட்பு நாடு என்று தெரிவித்துள்ளார்.