இந்தியாவில் மக்கள் ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு செல்ல பல்வேறு போக்குவரத்து வசதிகள் உள்ளது. பேருந்து, விமானம், சொந்த வாகனங்கள் என ஏராளமான போக்குவரத்து அம்சங்கள் இருந்தாலும் மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய ஒன்று தான் ரயில். இந்தியாவில் நீங்கள் எந்த மூலைக்கு செல்ல வேண்டும் என்றாலும் ரயில் மூலம் மிகவும் சுலபமாக எந்த அசௌகரியமும் இன்றி பயணம் மேற்கொள்ளலாம். கூடுதல் வசதியாக தொலை தூரம் செல்ல நினைப்பவர்கள் 120 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்து கொள்ளலாம்.
முன்பதிவு செய்ய ரயில் நிலையங்களில் இருக்கும் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்களில் அல்லது இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். டிக்கெட் முன்பதிவுக்காக ரயில்வே துறை தரப்பில் பிர்த்தியேகமாக ஐ.ஆர்.சி.டி.சி என்ற செயலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலி மூலம் பலரும் தங்களுக்கு தேவையான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். கடந்த 2014 ஆம் ஆண்டு அறிமுகமான இந்த செயலி 10 கோடிக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
ஐ.ஆர்.சி.டி.சி டிக்கெட் புக்கிங் செயலி போக புறநகர் ரெயில் டிக்கெட்டுகளுக்காக யூடிஎஸ் செயலி மற்றும் ரெயில்கள் எங்கு இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ள தனி செயலி என ஒவ்வொரு சேவைகளுக்கும் தனித்தனி செயலிகளை பயணிகள் டவுன்லோடு செய்து பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே, இது அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே செயலியில் கொண்டு வர இந்திய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
அதன்படி தற்போது சூப்பர் ஆப் என்ற செயலியை உருவாக்கும் பணியை தொடங்கியுள்ளது. இந்த செயலியை உருவாக்க ரூ.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சூப்பார் ஆப் மக்கள் பயன்பாட்டிற்கு வர இன்னும் 3 ஆண்டுகள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வேயின் பிற செயலிகளான PortRead, Satark, TMS-Nirikshan, ஐஆர்சிடிசி ரயில் கனெக்ட், ஐஆர்சிடிசி இகேட்டரிங், ஐஆர்சிடிசி ஏர் என 12-க்கும் மேற்பட்டா செயலிகள் ஒருங்கிணைந்து ஒரே செயலியாக கொண்டு வரப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் தனித்தனியாக செயலிகளை டவுன்லோடு செய்ய தேவையிருக்காது என்றும் ஒரே செயலியின் மூலமாக ரெயில்வே சேவைகளை பெற முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோடிக்கணக்கான மக்கள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி பயணம் மேற்கொண்டு வருகின்றனர், இந்த சூப்பர் ஆப் வந்தால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.