ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிபதியின் பதவி உயர்வை நிறுத்திவைத்தது உச்சநீதிமன்றம். பழைய பதவியிலேயே நீதிபதி தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக கூறிய வழக்கில் அவரௌக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்த தலைமை நீதித்துறை நீதிபதி ஹரிஷ் ஹஸ்முக்பாய் வர்மா உட்பட 68 நீதித்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியது. 


ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய தீர்ப்புக்கு பின் நீதிபதி வர்மாவுக்கு செசன்ஸ் நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. மேலும், வர்மா உள்பட 68 பேரின் பதவு உயர்வையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 


இந்த வழக்கு நீதிபதி எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அதில் ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய ஹரிஷ் ஹஸ்முக்பாய் வர்மா உள்ளிட்ட குஜராத்தின் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் 68 பேரின் பதவி உயர்வை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.



மேலும், அவர்கள் ஏற்கனவே வகித்துவந்த பதவிக்கே செல்லவேண்டும் என்றும், பதவி உயர்வு என்பது தகுதி மற்றும் பணி மூப்பு அடிப்படையில் வழங்கவேண்டும் என்றும் தெரிவித்து, பதவி உயர்வு அளிக்கும் குஜராத் உயர்நீதிமன்றத்தின் பரிந்துரை மற்றும் குஜராத் அரசு வெளியிட்ட அறிக்கை சட்டவிரோதமானது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.


என்ன பேசினார் ராகுல் காந்தி..? 


கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோரை மறைமுகமாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, "எப்படி, திருடர்கள் அனைவருக்கும் மோடி என பெயர் சூட்டுகிறார்கள்?" என கேள்வி எழுப்பியிருந்தார்.


ராகுல் காந்தியின் இந்த பேச்சு, அவதூறு கிளப்பும் வகையில் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டு, தீர்ப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. அதில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது சூரத் நீதிமன்றம். இதன் காரணமாக, மக்களவை உறுப்பினராக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.


தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய 30 நாட்களுக்கு அவருக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தண்டனையை நிறுத்த வைக்கக் கோரி ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், ராகுல் காந்தியால் தற்போதைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது.