குஜராத் தொங்குபாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளான மோர்பி (Morbi) பகுதியை  பிரதமர் நரேந்திர மோடி நாளை பார்வையிடுகிரார்.


இது தொடர்பாக குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் அலுவலகத்தின் டிவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மோர்பி பகுதியில் கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராணுவம், கடற்படை, விமானப்படை, என்.டி.ஆர்.எஃப், தீயணைப்புப் படை வீரர்கள்  தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன என  குஜராத் தகவல் துறை தெரிவித்துள்ளது.


இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்தினை பார்வையிட பிரதமர் மோடி நாளை பயணம் மேற்கொள்கிறார்.






குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஞாயிற்றுக்கிழமை இரவு மாநிலத்தில் உள்ள மோர்பி நகருக்குச் சென்று, மச்சு ஆற்றின் மீது புதிதாகப் புனரமைக்கப்பட்ட பாலம் மாலையில் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் உயிரிழந்ததையடுத்து, நடந்து வரும் மீட்புப் பணியை பார்வையிட்டார். ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பழமையான பாலம், விரிவான பழுது மற்றும் புதுப்பித்தலுக்குப் பிறகு அக்டோபர் 26 அன்று மீண்டும் திறக்கப்பட்டது. 


விபத்து நடந்தது எப்படி? நேற்று மாலை 6.42 மணிக்கு இந்த விபத்து நடந்தது. விபத்தின் போது பாலத்தில் 500 பேர் இருந்தனர். சத் பூஜைக்காக மக்கள் கூட்டம் பாலத்தில் குவிந்திருந்தது. அப்போது எதிர்பாராமல் பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இன்னும் ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தப் பாலம் கேபில்களால் ஆன பாலம்.  இது குறித்து குஜராத் தொழிலாளார் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் ப்ரிஜேஷ் மிஸ்ரா கூறுகையில், இந்தப் பாலத்தை அண்மையில் தான் சீரமைத்தோம். குஜராத் புது வருடத்தை ஒட்டி அக்டோபர் 26 ஆம் தேதி திறக்கப்பட்டது. ஆனால் அதற்குள் இவ்வளவு பெரிய விபத்து நடந்திருப்பது எங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்திற்கு அரசாங்கம் பொறுப்பேற்கிறது என்று கூறினார்.  


பிரதமர் நரேந்திர மோடி, முதல்வரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். நிகழ்விடத்தில் பல்வேறு அரசுத் துறை உயரதிகாரிகளும் குவிந்துள்ளனர்.


பிரதமர் நரேந்திர மோடி இந்த விபத்து தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். அதில் அவர், "மோர்பி பால விபத்து என்னை மிகுந்த கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. குஜராத் முதல்வர் பூபேந்திராவுக்கு பேசியுள்ளேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெறுகின்றன. அதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று கூறியுள்ளார். மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் ஷங்கவி மோர்பி பகுதிக்கு விரைந்துள்ளார். மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள், தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்" என்று பதிவிட்டிருந்தார். இந்த விபத்தின் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ள இருந்த சாலை பயணம் இன்று ரத்து செய்யப்படுகிறது.


நிவாரணம் அறிவிப்பு:


இதற்கிடையில் மோர்பி பால விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணத் தொகை வழங்க முதல்வர் பூபேந்திர படேல் உத்தரவிட்டுள்ளார். இதுதவிர பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து  நடந்த போது பாலத்தில் மக்கள் பலர் தொங்கிக் கொண்டிருந்த வீடியோவும், ஆற்றில் விழுந்து தத்தளித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. இதுவரை 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 400 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பலர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த கோர சம்பவத்துக்கு மத்தியில் பிரதமர் மோடியின் சாலை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.