சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி பொய் சொல்வதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்- சாட்டியுள்ளார்.


”மோடி எதையாச்சும் சொல்ல வேண்டும்”


டெல்லியில் இருந்து கர்நாடக புறப்பட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியாவின் அருணாச்சலபிரதேசத்தை உரிமைகோர சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி “லடாக்கில் ஒரு பிடி நிலத்தை கூட சீனா கைப்பற்றவில்லை என பிரதமர் மோடி கூறுவது பொய் என பல ஆண்டுகளாக நான் கூறி வருகிறேன்.


சீனா அத்துமீறி நடந்துகொள்வது லடாக்கில் உள்ள அனைவருக்குமே தெரியும். இந்த வரைபட பிரச்னை மிகவும் முக்கியமானது. இந்தியாவின் நிலத்தை அவர்கள் உரிமை கோருகின்றனர். இதுதொடர்பாக பிரதமர் மோடி எதையாவது வாய்திறந்து பேச வேண்டும்” என கூறியுள்ளார். 






பிரச்னை என்ன?


சீனாவின் வளங்களை வெளிப்படுத்தும் விதமாக அந்நாடு நிலையான (standard) வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அருணாச்சல பிரதேச மாநிலம் முழுவதும் சீனாவை சேர்ந்தது என்பதை போன்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, அக்ஷை சின் மற்றும் தைவான் ஆகிய பகுதிகளையும் தங்களது நாட்டு ஸ்டேண்டர்ட் வரைபடத்தில் சீனா இணைத்துள்ளது. குறிப்பிட்ட நாடுகளின் வளங்களை கொள்ளையடிக்கவே சீனா இதுபோன்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தொடர்வதாக கூறப்படுகிறது. 


ஜெய்சங்கர் கண்டனம்:


சீனாவின் செயல்பாடு தொடர்பாக பேசியுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் “இது சீனாவின் பழைய பழக்கம். உரிமை இல்லாத பகுதிகளை தங்களுக்கானது என சீனா கோருவது தொடர்கதையாக உள்ளது.  நமது பகுதிகள் என்ன என்பதில் இந்த அரசு மிக தெளிவாக உள்ளது. சீனா கூறியிருப்பது அபத்தமானதாக உள்ளது. வரைபடத்தில் சேர்த்துக்கொண்டு உரிமை கோருவதன் மூலம், அடுத்த நாட்டின் பகுதிகள் சீனாவுடையது ஆகாது’’ என தெரிவித்தார். வெளியுறவு அமைச்சகமும் சீனாவின் செயல்பாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான், சீனாவின் செயல்பாடு தொடர்பாக பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.