புதுச்சேரி பெரிய மார்க்கெட்டை இடித்துவிட்டு புதிதாக கட்ட எதிர்ப்பு தெரிவித்து, கருப்புக்கொடி ஏந்தி வியாபாரிகள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வியாபாரிகளுக்கு ஆதரவு தெரிவித்து இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திடீரென்று போலீஸ் பாதுகாப்பு வளையத்தை மீறி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து எதிர்கட்சி தலைவர் சிவா, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, திமுக-காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.


ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பெயரில் சிறு வணிகத்தையும், சாலையோர வியாபாரிகளையும், உழைக்கும் மக்களையும் நகரத்தை விட்டு அப்புறப்படுத்த முயற்சிக்கும் புதுச்சேரி அரசை கண்டித்தும், உழைக்கும் மக்களை பாதிக்காத வகையில் அரசு திட்டமிட வேண்டும் என்று வலியுறுத்தி  இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. நேருவீதி குபேர் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் பெரிய மார்க்கெட் பகுதியில் உள்ள  சுமார் 500-க்கும் மேற்பட்ட கடைகள், அதே போல் காந்தி வீதி, நேருவீதி, தியாகு முதலியார் வீதி, பாரதிவீதியில் உள்ள கடைகளை இன்று வியாபாரிகள் அடைத்து கறுப்பு கொடி கட்டி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நகர பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.


இதையடுத்து வியாபாரிகளுக்கு ஆதரவு தெரிவித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரியமார்க்கெட்டை முழுமையாக இடிக்கும் முடிவை கைவிட்டு நேருவீதியில் உள்ள சிறைச்சாலை அமைந்துள்ள பகுதியில் வியாபாரிகளுக்கு இடத்தை மாற்றித்தந்து கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும்.  கட்டுமான பணிகளை பகுதி, பகுதியாக செய்ய வேண்டும். பெரியமார்க்கெட் வியாபாரிகள் அனைவரின் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் கோரிக்கை அடிப்படையில் நவீனமயம், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி 31-ந்தேதி தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று இந்தியா கூட்டணி சார்பில்  அறிவிக்கப்பட்டது. அதன்படி எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் காமராஜர் சிலை அருகே இன்று திரண்டனர். பின்பு அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, நேருவீதி வழியாக காந்தி வீதி வந்தனர். அங்கு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில், கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளும் பங்கேற்று உள்ளனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று இருப்பதால் புதுச்சேரியில் மைய பகுதியான நேருவீதி, காந்தி வீதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு பகுதி எஸ்பி சுவாதிசிங் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


இந்த ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு இந்தியா கூட்டணி கட்சியினர் ஆளுநர் மாளிகை நோக்கி சென்று, பாதுகாப்பு வளையத்தை மீறி முற்றுகையிட முயன்றனர். இதை போலீசார் தடுத்ததால் கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து எதிர்கட்சி தலைவர் சிவா, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, திமுக-காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.