அமெரிக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகளால் கூட்டாக உருவாக்கப்பட்ட, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நாசா-இஸ்ரோ செயற்கைத் துளை ரேடார் எனப்படும் NISAR செயற்கைக்கோள், இந்தியாவிற்கு வந்தடைந்தது. கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் மெகா அறிவியல் பேலோட் ஒருங்கிணைக்கப்பட்டது.






அமெரிக்க விமானப்படை விமானம் சி-17 மூலம் இந்த செயற்கைக்கோள் அமெரிக்காவில் இருந்து பெங்களூரு வந்தடைந்ததாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது. செயற்கைக்கோள் வந்தடைந்ததன் மூலம் இதன் அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கும். அதாவது ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 2024 ஆம் ஆண்டு காலாண்டு பகுதியில் விண்ணில் செலுத்தப்பட இருக்கும் நிலையில் செயற்கைக்கோளை ஒருங்கிணைப்பது மற்றும் அதன் இறுதிக்கட்ட பணிகளை இஸ்ரோ வரும் மாதங்களில் மேற்கொள்ளும்.


இந்த மெகா செயற்கைக்கோள் இரண்டு தனித்தனி ரேடார்களைக் கொண்டுள்ளது. Long range எல் பேண்ட் ரேடார் - அமெரிக்க விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது, எஸ்-பேண்ட் ரேடார் பெங்களூரில் உள்ள இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது. இரண்டுமே ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்திற்கு (ஜேபிஎல்) கொண்டு செல்லப்பட்டன, அங்கு அவை ஒரு யூனிட்டாக ஒருங்கிணைக்கப்பட்டன. GSLV (Geosynchronous Satellite Launch Vehicle) இல் இறுதி ஏவுதலுக்காக இது இப்போது இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இரண்டு ரேடார்களும் 12 நாட்களுக்கு ஒருமுறை உலகம் முழுவதையும் வரைபடமாக்கி, இதுவரை பதிவு செய்யப்படாத இடங்களையும் இது பதிவு செய்யும். இரண்டு ரேடார்களும் சுமார் 12 விட்டம் கொண்ட ஒரு மெகா டிரம் வடிவ ஆண்டெனாவுடன் இணைக்கப்படும். நாசா இதுவரை விண்ணில் செலுத்திய ரேடார்களில் இது மிகவும் பெரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


விண்வெளியில் பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோள்கள் நிறைய இருந்தாலும், NISAR பூமியில் உள்ள நுட்பமான மாற்றங்களை மிகவும் துல்லியத்துடன் படம்பிடிக்கும் திறனைக் கொண்டுள்ளது. ரேடார்கள் இரவும் பகலும் அடர்த்தியான மேக மூட்டத்தின் வழியாக பார்க்கும் திறனை வழங்கும். இது 10 மீ அளவில் சிறிய மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அதனை கண்டறிந்து பதிவு செய்யும். இதன் ஆயுட்காலும் 3 ஆண்டுகள் என கூறப்பட்டுள்ளது.  ரேடார் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டவுடன், நிலம் மற்றும் பனிக்கட்டிகள் உட்பட பூமி எவ்வாறு ஒரு மாற்றமடைகிறது? பனிக்கட்டிகள் எவ்வளவு வேகமாக உருகுகின்றன, பனிப்பாறைகளின் ஓட்ட விகிதம், கடல் மட்டங்களில் அதிகரிப்பு மற்றும் புவி வெப்பமடைதலின் தாக்கம் குறித்து தரவுகளை சேகரிக்கும். நிலத்தடி நீர் மட்டம் குறைவதையும், அது எந்தளவுக்கு அருகில் உள்ள பகுதிகளை பாதித்துள்ளது மற்றும் நிலம் ஏதேனும் மூழ்கி உள்ளதா என்பதையும் கண்டறிய உதவும்.  


மிகவும் சவாலான இயற்கை ஆபத்துகளான நிலநடுக்கம், எரிமலைகள் மற்றும் நிலச்சரிவுகள் போன்றவற்றை கணிக்க உதவியாக இருக்கும். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 80 டெராபைட்கள் வரை செல்லக்கூடிய தரவு சேகரித்து பதிவு செய்யும். இது விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் இந்த  ரேடார் வறட்சி அல்லது காட்டுத்தீயின் ஆரம்ப அறிகுறிகளைக், நிலத்தின் ஈரப்பதம் குறித்து கண்டறிய உதவும்.