இந்தியாவின் எல்லை பகுதியில் அமைந்துள்ள ஜம்மு காஷ்மீர், புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். குறிப்பிட்ட இந்த பகுதியை, பாகிஸ்தான் தனக்கு சொந்தமானது என கூறி வருவதால் தொடர் பிரச்னை இருந்து வருகிறது.
இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பிரச்னையில் முக்கியமான விவகாரம் ஜம்மு காஷ்மீர். கடந்த 2019ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபோது கூட, அதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு முக்கிய காரணமே பாகிஸ்தான்தான் என இந்தியா தொடர் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறது.
100 அடி உயரத்தில் தேசியக் கொடி:
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் உள்ள மைதானத்தில் நிறுவப்பட்ட 100 அடி உயர தேசியக் கொடியை இந்திய ராணுவம் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தது. செனாப் பள்ளத்தாக்கு பகுதியில் ராணுவம் ஏற்றிய இரண்டாவது உயரமான கொடி இதுவாகும். கடந்த ஆண்டு ஜூலை மாதம் கிஷ்த்வாரில் 100 அடி உயர கொடி ஏற்றப்பட்டது.
ராணுவத்தின் டெல்டா படை பிரிவு தலைவர் மேஜர் ஜெனரல் அஜய் குமாருடன் இணைந்து ராஷ்டிரிய ரைபிள்ஸ் பிரிவு 9 கமாண்டர் பிரிகேடியர் சமீர் கே பலாண்டே, தோடா துணை ஆணையர் விஷேஷ் பால் மகாஜன், மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் அப்துல் கயூம், இந்த கொடியை ஏற்றி வைத்தனர்.
உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி:
இந்த நிகழ்வின்போது, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை மேஜர் அஜய் குமார் கவுரவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், "தேசத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாத்து தியாகம் செய்த செனாப் பள்ளத்தாக்கு பகுதியின் எண்ணற்ற ராணுவ வீரர்களுக்கு இந்த உயரமான கொடி அஞ்சலி செலுத்துகிறது.
வெகு தொலைவில் இருந்து பார்த்தாலும், இந்த தேசியக் கொடி, ஒவ்வொரு குடிமகனுக்கும் நாட்டின் பெருமையை உணர்த்தும். தோடா மலைகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கொடியானது இப்பகுதியின் சுற்றுலாவை மேலும் மேம்படுத்தும்.
தோடாவில் முதன்முதலாக உயர்ந்த கம்பத்தில் ஏற்றப்பட்டுள்ள தேசியக் கொடி, ராணுவம் மற்றும் மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு ஒரு பெருமைக்குரிய தருணம். அவர்களில் பலர், குறிப்பாக மாணவர்கள் மற்றும் போரில் கண்வரை பறி கொடுத்த மனைவிமார்கள்" என்றார்.
கடந்த 2007ஆம் ஆண்டு, ஜூன் மாதம், குப்வாராவில் இந்திய பாகிஸ்தகான் எல்லையில் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு இறந்த நைப் சுபேதார் சுன்னி லாலின் மனைவி சிந்தா தேவி இதுகுறித்து கூறுகையில், "இந்த நிகழ்வுக்கு எங்களை அழைத்ததன் மூலம், வீரமரணம் அடைந்த எனது கணவரின் சாதனைகள் குறித்து பெருமைப்படுத்தியுள்ளது.
ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் தியாகத்தை அவர்கள் என்றும் மறப்பதில்லை என்பதுதான் நமது ராணுவத்தின் அழகு" என்றார்.