நாட்டிலேயே முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய சுரங்க அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. லித்தியம் மட்டுமின்றி இரும்பு அல்லாத உலோகம், தங்கம் உட்பட 51 வகையான உலோகங்கள் இருக்கும் இடங்களையும் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
லித்தியம்:
மத்திய சுரங்கம் மற்றும் வளங்கள் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் “ ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ரேசாய் மாவட்டத்தில் சலால் ஹெய்மானா எனும் பகுதியில் முதல்முறையாக லித்தியம் தாதுக்களை இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்துள்ளது. பூமிக்கு அடியில் 59 லட்சம் டன் வரை லித்தியம் இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.
லித்தியம் உள்ளிட்ட தங்கம் இருக்கும் 51 இடங்களைக் கண்டறிந்து அவை குறித்த விவரங்கள் அந்தந்த மாநில அரசுகளிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த 51 தாதுக்கள் சுரங்கத்தில், 5 சுரங்கங்களில் தங்கம் இருக்கிறது, மற்ற சுரங்கங்களில் பொட்டாசியம், மாலிப்டேனம் உள்ளிட்ட பல்வேறு உலோகங்கள் தமிழகம், ராஜஸ்தான், ஒடிசா, கர்நாடகா, ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட 11 மாநிலங்களில் இந்த 51 சுரங்கங்கள் உள்ளன.
கடந்த 2018-19ம் ஆண்டிலிருந்து இந்த இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு இப்போதுவரை விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதுதவிர நிலக்கரி மற்றும் லிக்னைட் தாதுக்கள் இருக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு மத்திய நிலக்கரி அமைச்சகத்திடம் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. 7897 மில்லியன் டன் நிலக்கரி தாதுக்கள் இருக்கும் இடங்கள் பற்றிய விவரங்களும் வழங்கப்பட்டுள்ளன என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பேட்டரிகள்:
ரீசார்ஜபிள் பேட்டரிகளில் லித்தியம் ஒரு முக்கிய அங்கமாகும், இது ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் மற்றும் மின்சார கார்கள் போன்ற பல கேஜெட்டுகளில் பயன்படுத்தப்படுகிறது. புவி வெப்பமடைதலைச் சமாளிக்க கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 2030-க்குள் தனியார் மின்சார கார்களின் எண்ணிக்கையை 30% அதிகரிக்க இந்தியாவின் உந்துதலுக்கு இந்தக் கண்டுபிடிப்பு உதவக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தற்போதைய சூழலில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா லித்தியம் தாதுக்களை இறக்குமதி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலகெங்கிலும் லித்தியம் உள்ளிட்ட அரிய உலோகங்களின் தேவை அதிகரித்துள்ளது, ஏனெனில் உலக நாடுகள் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு, பசுமை தீர்வுகளை பின்பற்றுகின்றன. உலக வங்கியின் கூற்றுப்படி, 2050 க்குள் உலகளாவிய காலநிலை இலக்குகளை அடைய முக்கியமான கனிமங்களின் சுரங்கம் 500% அதிகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், லித்தியம் சுரங்க செயல்முறை சுற்றுச்சூழலுக்கு உகந்ததல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சுற்றுச்சூழலுக்கு ஆபத்தா?
ஆஸ்திரேலியா, சிலி மற்றும் அர்ஜென்டினாவில் பெரும்பாலும் காணப்படும் கடினமான பாறைகள் மற்றும் நிலத்தடி உப்பு நீர்த்தேக்கங்களிலிருந்து லித்தியம் பிரித்தெடுக்கப்படுகிறது. கனிமத்தை எடுத்த பிறகு, அது புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்தி வறுத்தெடுக்கப்படுகிறது, இந்த செயல்பாட்டின் போது அது நிலப்பரப்பை அழித்து, வடுக்களை விட்டுச்செல்கிறது. பிரித்தெடுக்கும் செயல்முறைக்கு நிறைய தண்ணீர் தேவைப்படுகிறது மற்றும் அதிக அளவு கார்பன் டை ஆக்சைடை வளிமண்டலத்தில் வெளியிடுகிறது எனக் கூறுகின்றனர்.