19,000 கோடி ரூபாய் செலவில் ஐந்து கடற்படை ஆதரவுக் கப்பல்களை வாங்குவதற்கு விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் (HSL) உடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தமிட்டுள்ளது.  






இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் (ஹெச்.எஸ்.எல்) நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் இன்று (25-08-2023) கையெழுத்திட்டுள்ளது. இந்திய கடற்படைக்கு ஐந்து கடற்படை ஆதரவுக் கப்பல்களை (எஃப்.எஸ்.எஸ்) வாங்குவது தொடர்பாக இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு ரூ. 19,000 கோடி ஆகும். இந்த கப்பல்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹெச்.எஸ்.எல் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்படுவதால், பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்பு இலக்கை அடைவதற்கு இது ஒரு பெரிய ஊக்க சக்தியாக இருக்கும்.  பாதுகாப்புத் துறைக்கான அமைச்சரவைக் குழு நடத்திய  கூட்டத்தில் இந்த கப்பல்களை வாங்க ஒப்புதல் அளித்தது. 


கடலில் உள்ள இந்திய கடற்படை போர்க் கப்பல்களுக்கு எரிபொருள், நீர், வெடிமருந்துகள் போன்றவற்றைக் கொண்டு சென்று வழங்க இந்த எஃப்.எஸ்.எஸ் எனப்படும் ஆதரவுக் கப்பல்கள் பயன்படுத்தப்படும். இது இந்திய கடற்படை கப்பல்கள் துறைமுகத்திற்கு வராமல் நீண்ட காலத்திற்கு கடலில் செயல்பட உதவும். இந்த ஆதரவுக் கப்பல்கள் கடற்படையின் செயல்பாட்டை மேம்படுத்தும் என கூறப்படுகிறது. இந்த கப்பல்களை கடற்படையில் இணைப்பது, இந்திய கடற்படையின் திறனை கணிசமாக அதிகரிக்கும். இயற்கைப் பேரிடர் காலங்களில் மக்களை வெளியேற்றுவதற்கும், மீட்பு பணிகள், தேவையான  உதவி மற்றும் பேரிடர் நிவாரண (எச்.ஏ.டி.ஆர்) நடவடிக்கைகளுக்கும் இந்த கப்பல்களைப் பயன்படுத்த முடியும் என இந்திய கப்பற்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


44,000 டன் எடை கொண்ட கடற்படை ஆதரவு கப்பல்கள் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே கட்டப்படவுள்ளன.  இந்த கப்பல்களின் கட்டுமானம் இந்திய கப்பல் கட்டும் தொழிலுக்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்கும். அத்துடன் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் என கூறப்படுகிறது. பெரும்பாலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கப்படவுள்ளதால், இந்தக் கப்பல்கள் அரசின், இந்தியாவின்  ஆத்மநிர்பர் பாரத் (Aatmanirbhar Bharat)  திட்டத்துக்கு ஏற்ப அமையும் என்பதுடன் தற்சார்பை ஊக்குவிக்கும். 


Rahul Gandhi: லடாக் மக்களின் குரல் நசுக்கப்படுகிறது.. பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன் ..ராகுல் காந்தி உறுதி