பிரான்ஸின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட ரஃபேல் போர் விமானத்தின் 36வது போர்விமானம் இன்று இந்தியா வந்து சேர்ந்தது. 






ரஃபேல்  பின்னணி


ஜனவரி 31 ,2012ம் ஆண்டில் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் 126 ஜெட் ரபேல் போர் விமானங்களை வாங்குவது என்றும். இவற்றில் 18 விமானங்கள் பறப்பதற்குத் தயார் நிலையில் தரப்படும். மீதமுள்ள 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இதற்கான தொழில்நுட்பத்தை டஸ்ஸால்ட் நிறுவனம் வழங்க இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல் (ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட்) விமானங்களை உற்பத்தி செய்யும் என முடிவானது.


இதன்படி ஹெச்ஏஎல் – டஸ்ஸால்ட் இரு நிறுவனங்கள் இடையேயான வேலை ஒப்பந்தம் 2014 மார்ச்சில் கையெழுத்தானது. பின்பு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் 2015ம் ஆண்டு ஏப்ரலில் தலைமை அமைச்சர் மோடி அவர்கள் முன்பு எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக 36 ரபேல் விமானங்கள் மட்டும் வாங்கப்போவதாக அறிவித்து, 126 விமானங்களுக்கான முந்தைய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்று அறிவித்தார் அன்றைய பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பாக இருந்த மனோகர் பாரிக்கர் முன்னிலையில் 2016 செப்டம்பரில் ரூ.59ஆயிரம் கோடிக்கு 36 ரஃபேல் போர்விமானங்களை  வாங்க ரிலையன்ஸ்-டஸ்ஸால்ட் நிறுவனங்களுக்கிடையில் ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது.  


இதில் முதல்கட்டமாக கடந்த 2020ம் ஆண்டு, ஜூலை 29ம் தேதி 5 விமானங்கள் அம்பாலா விமானத் தளத்துக்கு வந்து சேர்ந்தன. அவை முறைப்படி இந்திய விமானப்படையில் அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இணைக்கப்பட்டன. அதன்பின் இரு கட்டங்களாக தலா 3 ரஃபேல் போர் விமானங்கள் என 6 விமானங்கள் இந்தியாவுக்கு வந்தன.


கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு கடைசியாக 5 விமானங்களில் 4 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்தன. இந்த விமானங்கள் அனைத்தும் கோல்டன் ஆரோஸ் படைப்பிரிவில் விரைவில் சேர்க்கப்பட உள்ளது. மொத்தமுள்ள 36 ரஃபேல் போர் விமானங்களில் 35 விமானங்கள் இதுவரை வந்துவிட்டநிலையில் இன்னும் ஒரு விமானம் மட்டும் வர வேண்டியதிருந்தது.


ஏற்கெனவே வந்த 35 ரஃபேல் விமானங்களும் அம்பாலா, ஹரியானா, மேற்கு வங்கத்தின் ஹசிமரா விமானத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. 


இந்நிலையில் 36வது மற்றும் கடைசி ரஃபேல் போர்விமானம் பிரான்ஸில் இருந்து புறப்பட்டு இன்று இந்தியா வந்து சேர்ந்தது. இதை இந்திய விமானப்படை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. நடுவானில் இந்திய ரஃபேல் விமானத்துக்கு ஐக்கியஅரபு அமீரகத்தில் ஏர்பஸ் விமானம் எரிபொருள் நிரப்பியுள்ளது.


இந்த ரஃபேல் போர்விமானத்தில் அதிநவீன வசதிகள் உள்ளன. வானில் இருந்தே வான் இலக்கை நோக்கி குறிபார்த்து சுடுதல், வானில் இருந்து பூமியிலிருந்து வரும் ஏவுகணைகளை அழிப்பது, அதிநவீன ராடார், உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.