தினமும் மன உளைச்சல்:


புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டிய போராடும் குழுவினர் முதலமைச்சர் ரங்கசாமியை இன்று சந்தித்தனர். அப்போது, அந்த குழுவினர் முன்பாக பேசிய முதலமைச்சர் ரங்கசாமி “கடந்த ஆட்சியில் உச்சநீதிமன்ற உத்தரவு தெளிவாக சொன்னபிறகு நமக்கு மரியாதையே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. உண்மையான விடுதலை புதுச்சேரிக்கு இன்னும் கிடைக்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் யாருக்காவது ஏதாவது செய்து தர வேண்டும் என்றால் முடியவில்லை. தினமும் மன உளைச்சல்தான். இதற்கு ஒரே தீர்வு மாநில அந்தஸ்து மட்டுமே ஆகும்” இவ்வாறு அவர் பேசினார்.


புதுச்சேரியில் கடந்த சில ஆண்டுகளாக மாநில அந்தஸ்து கோரிக்கை வலுத்து வருகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் ஆளுநரின் ஒப்புதல் பெற்றே முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழல் நிலவி வருகிறது.  இந்த சூழலில்தான் புதுச்சேரிக்கு அந்தஸ்து கோரி போராடும் குழுவினர் முதலமைச்சர் ரங்சாமியை சந்தித்து, இந்த கோரிக்கை தொடர்பாக மீண்டும் வலியுறுத்தினர்.


ஆளுநர் அதிகாரம்:


அவர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, மத்திய அரசிடம் தினம்தினம் கோரிக்கை விடுத்து வருவதாகவும், ஆனால் தற்போதைக்கு அது முடியாது என்பதால் மிகவும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன் என்றார். புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. சமீபகாலமாக புதுச்சேரியில் ஆளுநரின் அதிகாரம் அளவுக்கு அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.


ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பல்வேறு ஆய்வுப்பணிகளை புதுச்சேரியில் அவ்வப்போது மேற்கொண்டு வருவதுடன், பரபரப்பான பேட்டிகளையும் அளித்து வருகிறார். இந்த நிலையில், புதுச்சேரியில் முதலமைச்சரே அதிகாரம் இல்லாததால் மன உளைச்சல் என்றும், மக்களுக்கு தன்னால்  எதுவும் செய்ய இயலவில்லை என்று வெளிப்படையாக பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


முதலமைச்சரின் இந்த வேதனை பேச்சால் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க. கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.