இமாச்சலப் பிரதேச மாநிலம் கின்னாவூர் மாவட்டத்தில் நடந்த நிலச்சரிவு விபத்தில் இதுவரை 11 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் 60 பேர் வரை சரிவுகளின் இடுபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்றும் மாநில முதல்வர் ஜெய்ராம் தாகூர் கூறியுள்ளார்.


இமாச்சலப் பிரதேச மாநிலம் கின்னாவூர் மாவட்டத்தில் நிகுல்சாரி அருகே நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 24 பேர் சென்ற பேருந்தும் பல்வேறு வாகனங்களும் இடிபாடுகளில் சிக்கியுள்ளன. பலி எண்ணிக்கை முதலில் பத்து என உறுதி செய்யப்பட்ட நிலையில் அது தற்போது 11 என உயர்ந்துள்ளது.


 









நேற்று சுமார் 12:45 மணியளவில் சிம்லாவின் கின்னாவூர் என்.ஹெச் -5 சாலையில் பெரிய பாறைகள் மலைகளில் இருந்து சரியத் தொடங்கியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் விவரித்துள்ளனர். விபத்தில் முதல்கட்டமாக பேருந்தின் ஓட்டுநர் மகிந்தர் பால், கண்டக்டர் குலாப் சிங் உள்ளிட்ட 13 பேரை மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்துள்ளது மாநில பேரிடர் மீட்புக் குழு மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழு.





தொடர்ந்து சரிந்து வரும் கற்களால் மீட்புப் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் ஜெய்ராம் தாகூர் கூறியுள்ளார்.  பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா மீட்புப்பணிக்காக அனைத்து உதவிகளும் செய்வதாக உறுதியளித்துள்ளதாகவும் ராணுவ ஹெலிகாப்டரும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தாகூர் தெரிவித்துள்ளார். 200 ஜவான்கள் வரை மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.