அமலாக்கத்துறை சட்ட விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்க வேண்டிய அமைப்பு என்றும் அது சாதாரண குடிமக்களுக்கு எதிராக அடாவடித்தனமாக செயல்பட முடியாது எனவும் டெல்லி நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.


ரயில்வே வேலை வாய்ப்பு மோசடி தொடர்பாக முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் குடும்ப உறுப்பினர்களுடன் பணப் பரிவர்த்தனை செய்ததாக தொழிலதிபர் கத்யால் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது. இதனிடையே அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. 


கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் கத்யாலுக்கு உடல் குறைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.


இதனிடையே இடைக்கால ஜாமினை நீடிக்க கோரி கத்யால் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அமலாக்கத்துறை அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், கத்யாலுக்கு சிகிச்சை அளித்து வந்த அப்பல்லோ மற்றும் மேதாந்தா மருத்துவமனை மருத்துவர்களிடம் வாங்கிய வாக்குமூலங்களையும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அமலாக்கத்துறையின் இத்தகைய செயலுக்கு கத்யாலின் வழக்கறிஞர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.


இது பிரிவு 50 PMLA இன் கீழ் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கையை மீறுவது மட்டுமல்லாமல், குற்றம் சாட்டப்பட்டவரின் அடிப்படை உரிமையான மருத்துவ சிகிச்சையின் தனியுரிமையில் ஊடுருவுவதாகவும் வாதிடப்பட்டது.


வாதங்களை கேட்ட ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி (பிசி சட்டம்) விஷால் கோக்னே, குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லாமல், சாதாரண குடிமக்களை அதாவது மருத்துவர்களை பிரிவு 50 PMLA-ன் கடுமையான செயல்முறைக்கு உட்படுத்துவதற்கு அமலாக்கத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்தார். 


இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் குடிமக்களுக்கு என உரிமைகள் உள்ளன. அதேபோல் அரசுக்கும் சில கடமைகள் உள்ளன. இந்த அடிப்படை உரிமையை மாற்ற முடியாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.


நீதிபதி கோக்னே  கூறுகையில், "ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் அடிப்படையாக அமையும். அதனால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. இது  அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகும். சட்டம் மற்றும் நீதிமன்றங்களுக்குப் பொறுப்பான ஒரு நிறுவனமாக அமலாக்கத்துறை இருக்க வேண்டும். அமலாக்கத்துறை அதிகாரங்களைத் தனக்கென உருவாக்க முடியாது.


தனியார் மருத்துவமனைகளின் சட்டத்தை மதிக்கும் மருத்துவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறையால் பிரிவு 50 [PMLA] பயன்படுத்துவது ஏற்க முடியாத ஒன்று. விசாரணை நிறுவனங்கள் இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். அதேபோல் நீதிமன்றங்கள் இதுபோன்ற விஷயங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்” என  தெரிவித்துள்ளார்.