பழங்குடிகளுக்கான போராட்டக்காரர் 84 வயதான ஸ்டேன் ஸ்வாமி கொரோனா பாதிப்பின் தாக்கம் காரணமாக நேற்று முன்தினம் இறந்தார். தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் பிறந்த ஸ்டேன் ஸ்வாமி ஜார்க்கண்ட் மாநில பழங்குடிகளின் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்தவர். 2017 டிசம்பர் இறுதியில் மகாராஷ்டிர மாநிலம் பீமா கோரேகானில் வன்முறை வெடித்தத்தை அடுத்து ஜனவரி  2018ல் அந்த வன்முறை குறித்தான முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது புனே போலீஸ். அதில் 2018 ஆகஸ்ட் மாதம்    
ஸ்டான் ஸ்வாமியும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார்.


தனக்கு எதிரான வழக்கை செல்லாது என அறிவிக்கச் சொல்லி மும்பை உயர்நீதிமன்றம் சென்றார் ஸ்வாமி. நீதிமன்றம் அவரது கைதுக்கு எதிரான பாதுகாப்பை நீட்டித்து உத்தரவிட்டது. இதற்கிடையே பீமா கோரேகான் வழக்கை தேசிய விசாரணை நிறுவனம் கையில் எடுத்தது. அதையடுத்து 2020 அக்டோபர் மாதம் விசாரணை நிறுவனத்தால் கைது செய்யப்பட்ட ஸ்டான் ஸ்வாமி, தலோஜா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  சிறையில் அடைக்கப்பட்டபோது அவருக்கு வயது 84. பார்கின்ஸன் நோயால் நீண்ட நாட்களாக பாதிக்கப்பட்டிருந்தார்.  தான் நோய்வாய்ப்பட்டிருப்பதால் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கும்படி அவர் தொடர்ந்த வழக்கில் விசாரணைக்குழுவின் நீதிமன்றம் அவரது ஜாமீனை மறுத்தது. அவர்மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. பார்க்கின்ஸன் நோயால் கைநடுக்கம் தீவிரமாக இருப்பதால் தனக்கு நீர் அருந்துவதற்கு வசதியாக ஸ்ட்ரா வைத்த தம்ளர் ஒன்றைத் தரும்படி நீதிமன்றம் வரை சென்று போராடினார் ஸ்டான் ஸ்வாமி. ஒரு ஸ்ட்ரா வைத்த தம்ளருக்காக அவர் ஒரு மாதத்துக்கு மேல் போராட வேண்டி இருந்தது.  அவரது உடல்நிலை மோசமான சூழலில் அவருடைய இரண்டாவது ஜாமீன் மனுவையும் நிராகரித்தது நீதிமன்றம், ‘தேசத்தில் அமைதியின்மையை உருவாக்குவதற்காக தீவிரமாகத் திட்டமிட்டார். அதற்கான ஆள்பலத்தையும் ஒன்றுதிரட்டியிருந்தார்’ என அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதற்கிடையேதான் அவருக்கு கடந்த 30 மே 2021ல் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 17 ஜூன் 2021ல் அவர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் கடந்த 4 ஜூலை 2021ல் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அடுத்த நாளே இறந்தார் ஸ்டான் ஸ்வாமி. 




ஸ்வாமி போல பீமா கோரேகான் வழக்கில் தொடர்புள்ள சுதா பரத்வாஜ், ஆனந்த டெல்டும்டே உள்ளிட்ட பலரும் இன்னும் சிறையில்தான் இருக்கின்றனர்.  பார்க்கின்ஸன் நோய் தீவிரமாக பாதிக்கப்பட்டவரை கைது செய்ததே தவறு இது திட்டமிட்ட அரசியல் படுகொலை என குரல்கொடுத்து வருகின்றனர் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள். 




இதுகுறித்துக் கொதித்து எழுந்துள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஹென்றி திபென், ‘மனித உரிமை ஆணையம் இந்த விவகாரத்தில் இன்னும் மௌனமாக இருப்பது வருத்தமளிக்கிறது.ஸ்டான் ஸ்வாமிக்காக 2018 முதல் தொடர்ச்சியாக மனித உரிமை ஆணையத்தில் மனு கொடுத்துவருகிறேன்.  சிறைச்சாலைகளின் நிலைமையை ஆணையத்தின் உறுப்பினர்களே நேரடியாகச் சென்று பார்வையிட வேண்டும். ஸ்டான் ஸ்வாமியின் மரணம் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் தலைகுணிவு. இன்னும் சுதா பரத்வாஜ் உள்ளிட்டவர்கள் சிறையில்தான் இருக்கிறார்கள்.அவர்களையாவது ஆணையம் காப்பாற்ற வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 




ஸ்டான் ஸ்வாமி அடைக்கப்பட்டிருந்த தலோஜா சிறை விசாரணைக் கைதிகளை அடைப்பதற்காகவென்று 2008ல் அரசால் கட்டப்பட்டது. 2000 பேர் கொள்ளளவு கொண்ட அந்தச் சிறையில் கொரோனா பேரிடர் காலத்தில் 3000 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். வெறும் 3 ஆயுர்வேத மருத்துவர்களை மட்டுமே கொண்டு அந்த சிறை இயங்கி வந்தது. 35 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதில் 8 பேர் இறந்திருந்தனர்.