கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுடன் பதவியேற்கும் 8 அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பரமேஸ்வரா, கே.எச். முனியப்பா, கே.ஜே. ஜார்ஜ், எம்.பி. பாட்டீல், சதீஸ் ஜர்கிஹோலி, பிரியங் கார்கே, ராமலிங்க ரெட்டி, சமீர் அகமது உள்ளிட்ட 8 பேர் இன்று அமைச்சராக பதவி ஏற்கின்றனர். இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மகன் பிரியங் கார்கேவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக மாநில தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் கடந்த 13ஆம் தேதி வெளியாகியது. காங்கிரஸ் கட்சி பெரிய வெற்றியை பதிவு செய்தது. காங்கிரஸ், தனிப்பெரும்பான்மை பெற்றாலும், அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி நீடித்தது. 

கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் இடையே முதலமைச்சர் பதவிக்கு கடும்போட்டி நிலவி வந்தது. இப்படிப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சித்தராமையா மற்றும் சிவக்குமார் தனித்தனியாக சந்தித்து பேசினர். இதனை அடுத்து, ராகுல் காந்தியையும் இருவரும் தனித்தனியாக சந்தித்து முதல்வர் பதவி பற்றி பேசினர்.

Continues below advertisement

கட்சியின் பெரும்பாலான எம்எல்ஏக்களின் ஆதரவு, சித்தராமையாவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய டி.கே.சிவக்குமார், சித்தராமையாவுக்கு முதலமைச்சர் பதவி வழங்க ஒப்பு கொள்ளவில்லை. 

இறுதியில், முதலமைச்சர் பதவி சித்தராமையாவுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. துணை முதலமைச்சர் பதவியை ஏற்க டி.கே.சிவக்குமார் ஒப்பு கொண்டார். காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட சித்தாராமையா, ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

யாருகெல்லாம் அமைச்சர் பதவி:  

இந்த சூழலில் யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி வழங்கப்படும் என அக்கட்சி தரப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதனடிப்படையில், இன்று முதல் பட்டியலாக 8 பேர் பெயரை வெளியிட்டுள்ளனர். அதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மகன் பிரியங் கார்கேவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் கர்நாடகா முன்னாள் துணை முதல்வர் ஜி. பரமேஸ்வரா, முன்னாள் உள்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல், ஆறாவது முறை எம்எல்ஏவாக தேர்வாகியுள்ள கே.ஜே. ஜார்ஜ், முன்னாள் மத்திய அமைச்சர் கே.எச். முனியப்பா,  முன்னாள் அமைச்சர் அகமது கான், காங்கிரஸ் மூத்த தலைவர் பி.ஆர். ரெட்டி மற்றும் சதீஸ் ஜர்கிஹோலி உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழா:

கர்நாடகா முதல்வராக சித்தராமையா இன்று மதியம் 12.30 மணி அளவில் கண்டீரவா விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்கிறார். அவருடன் துணை முதல்வர் டி.கே சிவகுமாரும் தற்போது வெளியிடப்பட்ட 8 அமைச்சர்களும் உடன் பதவியேற்கிறார்கள்.  அவர்களுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். முதல்வர், துணை முதல்வர் உட்பட 34 பேரில் இன்று 10 பேர் பதவியேற்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்காக சுமார் 50,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பதவியேற்பு விழாவில் 3 ஆயிரம் பார்வையாளர்கள் கலந்துக்கொள்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.