காவிரி மேலாண்மை ஆணையம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நவம்பர் 3ம் தேதி கூடுகிறது. இதில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
நேற்று நடந்த கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2, 600 கன அடி நீர் திறக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் நவம்பர் 2ம் தேதி கூடுகிறது.
இந்தநிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ கர்நாடகா தரவேண்டிய அளவு 16.44 டிஎம்சி, அதையும் அவர்கள் தரவில்லை. இதுவரை கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த அரசுகள் இவ்வளவு முரண் பிடித்தது இல்லை. தற்போது இருக்கும் கர்நாடக அரசு, எதிரி நாட்டில் மோதுவதுபோல் நினைக்கிறார்கள், நாம் ஏதோ அவர்களிடம் சலுகை கேட்பது நினைக்கிறார்கள். இந்த நாட்டினுடைய உச்சநீதிமன்றம் விதித்த விதிப்படிதான், இந்த நாட்டில் வாழும் மக்கள் நடக்க வேண்டும்.
ஆனால், ஒரு அரசே உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு கட்டுபடமால் இருப்பது ஜனநாயகத்திற்கு நல்லது இல்லை. சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக நீர்வளத்துறையை பார்த்து வருகிறேன். அதேபோல், பத்து முதல் பதினைந்து முதலமைச்சர்களை கடந்து வந்திருக்கிறேன், நீர்வளத்துறை அமைச்சர்களை பார்த்து இருக்கிறேன். இதில், என்ன கொடுமை என்றால் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா எனக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றாக தெரிந்தவர். அந்த மாநில நீர்வளத்துறை அமைச்சரும் எனக்கு வேண்டியவர்தான். ஆனால், இவர்கள் பிடிவாதமாக இருப்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
வருகின்ற நவம்பர் 3ம் தேதி காவிரி மேலாண்மை கூட்டத்தில் எவ்வளவு அளவு நீர் வேண்டும் என்பதை அறிவுறுத்துவோம். அங்கேயும் நமக்கான நீதி கிடைக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்." என்றார்.
முன்னதாக, கர்நாடக அதிகாரிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் நவம்பர் 1 முதல் 23 நாட்களுக்கு தமிழகத்திற்கு தினமும் 2,600 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் முறைப்படுத்தும் குழு (சிடபிள்யூஆர்சி) கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. அதன்படி, வருகின்ர நவம்பர் 1ம் தேதி முதல் 23ம் தேதி வரை காரைக்காலுக்கு 165 கனஅடி வீதம் தமிழகம் திறந்துவிட வேண்டும் என்றும் கமிட்டி உத்தரவிட்டுள்ளது.கமிட்டியின் அடுத்த கூட்டம் நவம்பர் 21ம் தேதி நடைபெறும்.
CWRC தலைவர் வினீத் குப்தா TNIE இடம் கூறுகையில், டெல்டா மாவட்டங்களில் விளையும் பயிர்களை காப்பாற்ற 11 டிஎம்சி அடி நீர் தேக்கத்தை விரைவில் சரி செய்ய வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுவரை வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட குறைவாகவே பெய்துள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், பல்வேறு காரணங்களால் ரிலீஸ் செய்ய முடியாது என கர்நாடகா கூறியுள்ளது.
23 நாட்களுக்கு 2,600 கனஅடி வீதம் போதிய அளவு ஒதுக்கீடு இல்லை என்றும், டெல்டா மாவட்டங்களில் விளையும் பயிர்களைக் காப்பாற்ற 15 நாட்களுக்கு தினமும் குறைந்தது 13,000 கனஅடி வீதம் திறந்துவிட வேண்டும் என்றும் தமிழகக் குழுவினர் கூறியதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) CWRCயின் உத்தரவு குறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கும்.