பழங்காலம் தொட்டே தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் உள்ள தொடர்பை கொண்டாடும் விதமாக காசி தமிழ்சங்கமம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் இதன் தொடக்க விழா நடைபெற்றது. 75ஆவது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடக்கும் இந்த நிகழ்வுக்கு ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்து பல குழுக்களாக பாரம்பரிய கலைஞர்கள் உத்தரபிரதேசம் சென்றுள்ளனர்.  


இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணையமைச்சர் எல். முருகன், மாநிலங்களவை உறுப்பினர் இளையராஜா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தண்ணுமை :


தொடக்க நிகழ்ச்சியில் மோடி ஒரு பழந்தமிழ் சொல்லை பயன்படுத்திநார். அது, அனைவரின் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. அந்த சொல்லின் பொருள் என்ன? என தேடும் அளவுக்கு ஒரு புதிய சொல்லை அவர் பயன்படுத்தி இருந்தார். 


"காசி மற்றும் தமிழ்நாடு இரண்டும் இசை, இலக்கியம் மற்றும் கலையின் ஆதாரங்களாக இருக்கின்றன. காசியின் தபேலாவும் தமிழ்நாட்டின் தன்னுமையும் புகழ்பெற்றவை. காசியில், நீங்கள் பனாரசி புடவையைப் பெறுவீர்கள், தமிழ்நாட்டில் நீங்கள் உலகம் முழுவதும் அறியப்பட்ட காஞ்சிவரம் பட்டுகளைப் பார்ப்பீர்கள்" என பிரதமர் மோடி பேசி இருந்தார். இதில், தண்ணுமை என்ற சொல்ல இதுவரையில் கேட்டிராத சொல்லாக உள்ளது. எனவே, அதன் பொருள் என்ன என்பது குறித்து தேட தொடங்கினோம். அதில், பலவிதமான தகவல்கள் கிடைத்தன.


 






தண்ணுமை என்பது தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியம் ஆகும். பெரும்பாலான கர்நாடக இசை நிகழ்ச்சிகளில், வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளில், தண்ணுமை என்ற வாத்தியம் முக்கியம் இடம்பெற்றிருக்கிறது. இது, தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஒரு இசைக்கருவி எனக் கருதப்படுகிறது. இதையொத்த இசைக்கருவி சிந்துவெளி நாகரீக காலத்திலும் புழக்கத்திலிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.


யாழ், குழல், கண்டப்பாடல்களுடன் இணைந்து இந்த வாத்தியம் இசைக்கப்பட்டுள்ளது. சங்கொலி திருக்கோயில் வழிபாட்டில் உடுக்கை, குடமுழா, கொக்கரை, தக்கை, தண்ணுமை, தமருகம், தாளம், பறை, மணி, முழவு, யாழ், வீணை, சங்கொலி போன்ற இசைக்கருவிகள் காணப்படுகின்றன. 


கம்பராமாயணத்தின் பால காண்டத்திலும் தண்ணுமை என்ற சொல்லாடல் இடம்பெற்றுள்ளது. 


"நெய்திரள் நரம்பின் தந்த
மழலையின் இயன்ற பாடல்
தைவரு மகர வீணை
தண்ணுமை தழுவித் தூங்க
கை வழி நயனம் செல்ல
கண்வழி மனமும் செல்ல
ஐய நுண் இடையார் ஆடும்
ஆடக அரங்கு கண்டார்'