கடந்த 2019ஆம் ஆண்டு, பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. சட்டப்பேரவையற்ற யூனியன் பிரதேசமாக லடாக்கும் சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரும் உள்ளது.


தற்போது, இரண்டும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. குறிப்பாக, ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு பிறகு, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது அதிகரித்திருப்பதாக மனித உரிமை ஆர்வலர்களும் குறைந்திருப்பதாக மத்திய அரசும் தெரிவித்து வருகிறது.


ஜம்மு காஷ்மீரில் மீண்டும் என்கவுண்டர்:


இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதுகுறித்து ஜம்முவின் கூடுதல் காவல்துறை இயக்குநர் முகேஷ் சிங் கூறுகையில், "ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் இன்று நடைபெற்ற என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். என்கவுண்டர் தொடர்ந்து வருகிறது" என்றார்.


இதையும் படிங்க..


Jailed Pakistan PMs: திரும்பிய வரலாறு..பெனாசிர் பூட்டோ முதல் இம்ரான் கான் வரை..கைதான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்களின் கதை


என்கவுன்டர், எப்படி நடைபெற்றது என்பதை விவரித்த அதிகாரிகள், "புத்தல் பகுதியில் உள்ள குந்தா-கவாஸ் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் மற்றும் ராணுவத்தினர் அங்கு சுற்றிவளைத்தனர். தேடுதல் நடவடிக்கையின் போது இந்த என்கவுன்டர் தொடங்கியது. முற்றுகையிடப்பட்ட கிராமத்திலிருந்து சில துப்பாக்கிச் சூடுச் சத்தங்கள் கேட்டன. கூடுதல் படைகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன" என்றனர்.


முன்னதாக, குட்காம் மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த 3 இந்திய ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டு வீர மரணம் அடைந்தனர்.


காஷ்மீரில் தொடரும் பயங்கரவாத தாக்குதல்கள்:


மத்திய உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2013ஆம் ஆண்டில் காஷ்மீரில் தீவிரவாதத்தோடு தொடர்புடைய சம்பவங்களின் எண்ணிக்கை 170ஆக பதிவான நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு 260 சதவீதம் அதிகரித்து 614 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.


கடந்த 2009 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில், தீவிரவாதத்தோடு தொடர்புடைய தாக்குதல்கள் மொத்தம் 1,717 நடந்த நிலையில், 2014 முதல் 2018 வரையிலான பாஜகவின் ஆட்சிக்காலத்தில் சற்றே குறைவாக 1,708 தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன.


2011 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் கிட்டத்தட்ட 250 முறை ஊடுருவல்கள் நிகழ்ந்துள்ளதாக அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், 2016ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவின் ஆளுகைக்குட்பட்ட காஷ்மீர் பகுதியில் அதிகளவிலான ஊடுருவல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவற்றில் பெரும்பான்மையானவை முறியடிக்கப்பட்டது.