ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீதான தினசரி விசாரணை, கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசுக்கும் மனுதாரர் தரப்புக்கும் இடையே பரபர வாதம் நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீர் வழக்கு:
கடந்த 14 நாள்களாக நடந்து வரும் விசாரணையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம், "ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற முடியுமா? ஒரு மாநிலத்திலிருந்து யூனியன் பிரதேசத்தை பிரிக்க முடியுமா? தேர்தல் எப்போது நடத்தப்படும்" என அடுக்கடுக்கான கேள்விகளை இந்திய தலைமை நீதிபதி எழுப்பினார்.
அதற்கு, மத்திய அரசின் பதிலை மனுவாக இன்று தாக்கல் செய்வதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார். அதன்படி, இந்திய தலைமை நீதிபதி எழுப்பிய கேள்விக்கு இன்று பதில் அளித்துள்ள மத்திய அரசு, "ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட யூனியன் பிரதேச அந்தஸ்து தற்காலிகமானது. இருப்பினும், ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து மீண்டும் எப்போது வழங்கப்படும் என்பதை சொல்ல முடியாது" என தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்து வரும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று மத்திய அரசின் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், "ஜம்மு காஷ்மீரில் தேர்தலை நடத்த தயாராக உள்ளோம். இந்திய தேர்தல் ஆணையமும் ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தல் ஆணையமும் தான் இது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும்.
"தேர்தலை நடத்த தயார்"
மத்திய அரசின் கருத்து என்னவென்றால், யூனியன் பிரதேச அந்தஸ்து தற்காலிகமானது என்று கூறும் அதே நேரத்தில், முழுமையான மாநில அந்தஸ்து எப்போது வழங்கப்படும் பற்றிய சரியான காலக்கெடுவை என்னால் இப்போது கொடுக்க முடியாது. பல 10 ஆண்டுகளாக தொடர்ச்சியான இடையூறுகளுடன் அரசு கடந்து வந்த விசித்திரமான சூழ்நிலைகள் காரணமாக, அதற்கு சிறிது நேரம் ஆகலாம்" என்றார்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்கள் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, "2018 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் பயங்கரவாத சம்பவங்கள் 45.2% குறைந்துள்ளன. ஊடுருவல் 90% குறைந்துள்ளது. கல் வீச்சு போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் 97% குறைந்துள்ளது.
பாதுகாப்புப் பணியாளர்களின் உயிரிழப்பு 65% குறைந்துள்ளது. 2018இல் 1767 கல் வீச்சு வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டு ஒரு சம்பவம் கூட நடைபெறவில்லை. இளைஞர்கள் இப்போது வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். முன்னதாக அவர்கள் பிரிவினைவாத சக்திகளால் தவறாக வழிநடத்தப்பட்டனர். 2018ஆம் ஆண்டு, 52 முறை பந்த் நடந்துள்ளது. இந்தாண்டு 1 கூட நடைபெறவில்லை. 2022 ஜனவரியில் மட்டும் 1.8 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். 2023ல் 1 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்" என வாதிட்டது.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், இதற்கு பதில் அளிக்கையில், "நீங்கள் 5,000 பேரை வீட்டுக் காவலில் வைத்திருந்தால், 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தால், எந்த பந்தையும் நடத்த முடியாது" என்றார்.