வரும் செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 


முடங்கி போன நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் :


கடந்த ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. மணிப்பூர் குறித்து நீண்ட விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து நாடாளுமன்றத்தை முடக்கின.


ஆனால், மணிப்பூர் குறித்து குறுகிய கால விவாதத்திற்கே மத்திய அரசு சம்மதித்தது. இதன் காரணமாக, நாடாளுமன்றம் முற்றிலுமாக முடங்கி போயுள்ளது. வழக்கமான அவை நடவடிக்கைகளை நடத்த முடியாமல் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரும் திணறினர்.


இதனால், பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் போனது. இறுதியாக, எதிர்க்கட்சிகள், நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர, பிரதமரின் பதிலோடு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முடிவுக்கு வந்தது. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.


நாடாளுமன்ற சிறப்புக்கூட்டம்:


இந்த நிலையில், வரும் செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடத்தப்படும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் (17வது மக்களவையின் 13ஆவது அமர்வு மற்றும் மாநிலங்களவையின் 261ஆவது அமர்வு) செப்டம்பர் 18 முதல் 22 வரை, 5 அமர்வுகளைக் கொண்டதாகக் கூட்டப்படுகிறது. நாடாளுமன்றத்தில் பயனுள்ள விவாதங்கள் மற்றும் விவாதங்களை நடத்துவதற்கு காத்திருக்கிறோம்" என எக்ஸ் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.


 






பொதுவாக, முக்கியமான காரணங்களுக்காகதான் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படும். ஆனால், தற்போது கூட்டப்பட உள்ள சிறப்பு அமர்வுக்கு காரணம் என்ன என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. வரும் 9 மற்றும் 10 தேதிகளில், டெல்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், இந்த சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்பட உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த மழைக்கால கூட்டத்தொடரில், மக்களவையில் 22 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன, மாநிலங்களவையில் 25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.