சூரியனை ஆராய உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஆதித்யா எல்1 விண்கலத்திற்கு, திட்ட இயக்குனராக தமிழ்நாட்டைச் சேர்ந்த நிகர் ஷாஜி பணியாற்றியுள்ளார்.
இஸ்ரோவின் அடுத்தடுத்த திட்டங்கள்:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அடுத்தடுத்து பல்வேறு முக்கிய விண்வெளி ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக அண்மையில் வெற்றி பெற்ற சந்திரயான் 3 திட்டம் சர்வதேச அளவில் இந்தியாவிற்கு பெருமையை தேடி தந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது சூரியனை ஆராய்ச்சி செய்யும் நோக்கில் ஆதித்யா எல்1 விண்கலம் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இது இஸ்ரோவின் மிக முக்கிய ஆராய்ச்சி முயற்சியாக உள்ளது.
தமிழர்களுக்கு முக்கியத்துவம்:
இஸ்ரோவின் குறிப்பிடத்தக்க வெற்றிகளில் நிலவை ஆராயும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட 3 சந்திரயான் திட்டங்கள் மிக முக்கியமானவை. அதைதொடர்ந்து, தற்போது முன்னெடுத்துள்ள ஆதித்யா எல்1 திட்டமும் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவிற்கு முக்கிய இடத்தை பெற்று தர உள்ளது. இத்தகைய இந்த நான்கு திட்டங்களுக்கும், தமிழர்கள் தான் இயக்குனர்களாக இருந்து செயல்பட்டுள்ளனர். ஏற்கனவே சந்திரயான் 1 திட்டத்திற்கு மயில்சாமி அண்ணாதுரையும், சந்திரயான் 2 திட்டத்திற்கு முத்தையா வனிதாவும் மற்றும் சந்திரயான் 3 திட்டத்திற்கு வீரமுத்துவேலும் இயக்குனர்களாக செயல்பட்டனர். மங்கள்யான் திட்டத்தின் இயக்குனராக அருணன் சுப்பையா செயல்பட்டார். இந்த நிலையில் ஆதித்யா எல்1 திட்டத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த நிகர் ஷாஜி திட்ட இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
யார் இந்த நிகர் ஷாஜி..!
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் தான் நிகர் ஷாஜி. சேக் மீரான் – சைத்தூன் பீவி தம்பதியினரின் இரண்டாவது மகளாக பிறந்த நிகர் ஷாஜியின் இயற்பெயர் நிகர்சுல்தான். தற்போது பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர் ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனராக செயல்பட்டு வருகிறார்.
கல்வி விவரம்:
செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1978-79-ஆம் கல்வியாண்டில், 10-ம் வகுப்பு பயின்று 433 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவிலும், கல்வி மாவட்ட அளவிலும் முதலிடம் பிடித்தார். அதேபோல், பன்னிரெண்டாம் வகுப்பில் 1980-81 ஆம் கல்வியாண்டில் 1008 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்தார். தொடர்ந்து, நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் சேர்ந்து 1982 முதல் 1986 வரை தனது இளநிலை பொறியியல் படிப்பை பூர்த்தி செய்தார். பிர்லா இன்ஸ்டிடியூட் டெக்னாலஜி நிறுவனத்தில் மேற்படிப்பை தொடர்ந்து, இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார். பல்வேறு ஆராய்ச்சி பணிகளுக்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் பல்வேறு நாடுகளுக்கும் நிகர் ஷாஜி சென்றுள்ளார்.
குடும்ப விவரம்:
நிகர் ஷாஜியின் கணவரான ஷாஜகான், துபாயில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் முகம்மது தாரிக் நெதர்லாந்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார். மகள், தஸ்நீம் பெங்களூரில் மருத்துவம் பயின்று வருகிறார். நிகர் ஷாஜியின் அண்ணன் ஷேக் சலீம், ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.