தனி தெலங்கானா போராட்டங்களில் முக்கிய பங்காற்றியவரும், புரட்சிக் கவிஞருமான கத்தார் எனப்படும் கும்மாடி விட்டல் ராவ் இன்று காலமானார். இவருக்கு வயது 77.


தனி தெலங்கானா போராட்டங்களில் முக்கியப் பங்காற்றியவரான கும்மாடி விட்டல் ராவ் எனும் கத்தார், நுரையீரல் பிரச்னை காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.


மார்க்சிய சிந்தனைகளை இளம் வயது முதலே கொண்டிருந்த இவர், 1980ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1997ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்ட கத்தார், தன் முதுகில் பாய்ந்த தோட்டா காரணமாக அன்று முதலே உடல் நலன் பாதிக்கப்பட்டு, அவதிப்பட்டு வந்தார்.


தெலங்கானாவின் தவிர்க்க முடியாத ஆளுமைகளில் ஒருவராகக் கொண்டாடப்பட்டு வந்த கத்தார், தன் புரட்சிகர வரிகள் மூலம் தெலங்கானா பகுதிகளில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை நாடு முழுவதும் கடத்தியவர் ஆவார்.


தனித் தெலங்கானா போராட்டங்களின் போது ஆத்மார்த்தமான பல பாடல்களுக்கும் வரிகளைத் தந்துள்ள இவர், அம்மாநிலத்தின் சமூக கலாச்சார அமைப்புகள், இயக்கங்களின் பிரபல முகமாக அறியப்பட்டதுடன் மக்கள் பாடகர் என்றும் புகழப்பட்டார்.


2014ஆம் ஆண்டு தனித் தெலுங்கானா மாநிலம் உருவான நிலையில், இந்த போராட்டம் தெலங்கானா நாட்டுப்புற இசையை நாடு கடந்து வெளிநாடுகள் வரை பிரபலமாக்கியது என கத்தார் மகிழ்ச்சி தெரிவித்தார். 


2010ஆம் ஆண்டு தொடங்கி தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உடன் கைக்கோர்த்து தனி தெலங்கானாவுக்காக போராட்டங்களில் ஈடுபட்ட கத்தார், பின் தங்கள் போராட்டம் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியால் ஆட்கொள்ளப்படுவதாக நினைத்தார். அதனைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து, தெலங்கானா ப்ரஜா முன்னணி இயக்கத்தைத் தொடங்கி போராட்டங்களை முன்னெடுத்தார்.


தெலங்கானா போன்ற விளிம்புநிலை சமூகத்தினர் அதிகம் உள்ள பகுதியில், மக்கள் இயக்கங்கள் மட்டுமே வெற்றி பெறும், அரசியல் கட்சிகள் அல்ல என கத்தார் அப்போது குறிப்பிட்டிருந்தார்.


தெலுங்கானா தனி மாநிலமாக உருவெடுத்த பிறகு மாநில அரசியலில் அங்கம் வகிக்க கத்தார் முயற்சித்தும் அவரது முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. அம்மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவால் தான் ஓரம் கட்டப்பட்டதாக கருதிய கத்தார், தலித்துகளை சந்திரசேகர ராவ் புறக்கணிப்பதாக குற்றம்சாட்டியய நிலையில், அவருடனான கருத்து வேறுபாடு மேலும் முற்றியது. மேலும், 2018ஆம் ஆண்டு வரை கேசிஆர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்த கத்தார் அதன் பின் அம்மாநில அரசைப் பற்றி விமர்சிப்பதை முற்றிலுமாக நிறுத்தினார்.


இறுதியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் கடந்த ஜூலை 2ஆம் தேதி கம்மம் பகுதியில் நடைபெற்ற பொது நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட கத்தார், தான் வாழ்நாள் முழுவதும் மாவோயிஸ்டுகள் மீது அனுதாபம் கொண்டு வாழ்ந்து வந்தார். கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பரில் தான் முதன்முறையாக தேர்தலில் இவர் வாக்களித்த நிலையில், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கத்தார் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று கத்தார் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.


இவரது மறைவுக்கு ராகுல் காந்தி, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் என அரசியல் தலைவர்கள் தொடங்கி, தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.