ஜூலை 5, 1994-ம் ஆண்டு அமேசான் நிறுவனம் தொடங்கப்பட்டது. கடந்த 27 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக ஜெப் பியோஸ் (57) இருந்து வந்தார். தற்போது 27-ம் தொடக்க நாளில் நிறுவனத்தின் இரண்டாவது தலைமைச் செயல் அதிகாரியாக ஆண்டி ஜாஸி (53)பொறுப்பேற்க இருக்கிறார். அமேசான் இயக்குநர் குழு தலைவராக ஜெப் இருந்தாலும், தினசரி பணிகளில் இருந்து முழுமையாக விலகுகிறார். இனி ஆண்டி ஜாஸி நிறுவனத்தின் முழு பொறுப்பையும் ஏற்பார்.
ஆண்டி ஜெஸி யார்?
நியூயார்க்கை சேர்ந்தவர் இவர். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்தவர். 1997-ம் ஆண்டு அமேசான் என்னும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் சேர்ந்தார். அன்று முதல் தற்போது வரை அமேசான் நிறுவனத்தின் பல கட்டங்களை தாண்டி தலைமை பொறுப்புக்கு வந்திருக்கிறார். 1997-ம் ஆண்டு மே மாதம் ஒரு வெள்ளிக்கிழமை அன்று இறுதி பரிட்சை எழுதுகிறார். அடுத்த திங்கள் கிழமை அமேசான் நிறுவனத்தில் இணைகிறார் ஆண்டி ஜாஸி.
2002-ம் ஆண்டு வரை அமேசான் நிறுவனத்தின் மியூசிக் பிரிவில் இருந்தார். அதே ஆண்டு ஜெப் பியோஸுக்கு shadow advisor ஆக நியமனம் செய்யப்பட்டார். அதாவது தலைமைச் செயல் அதிகாரியுடன் அனைத்து மீட்டிங்களிலும் கலந்து கொண்டு தேவையான ஆலோசனை மற்றும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
அமேசான் நிறுவனம் புத்தக விற்பனையில் இருந்து சி.டி. மற்றும் டி.வி.டி. விற்பனைக்கு மாறியதற்கு காரணமும் ஜாஸி கொடுத்த ஐடியாதான். தற்போது அமேசான் நிறுவனத்தின் வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது அமேசான் வெப் சர்வீசஸ். இதற்கான ஐடியா ஆண்டி ஜாஸி கொடுத்ததே. கிளவுட் கம்யூட்டிங் மொத்த சந்தையில் 30 சதவீதத்துக்கு மேல் அமேசான் வெப் சர்வீசஸ் வைத்திருக்கிறது. அதேபோல அமேசான் நிறுவனத்தின் லாபத்தில் 46 சதவீதத்துக்கு மேல் இந்த பிரிவில் இருந்து கிடைக்கிறது.
மைக்ரோசாப்ட்-ன் தற்போதைய தலைமைச் செயல் அதிகாரியாக சத்யா நாதெள்ளா இருக்கிறார். இவர் நியமனத்தின் போது ஆண்டி ஜெஸியின் பெயரும் சந்தையில் பேசப்பட்டது. அதேபோல உபெர் நிறுவனர் டிராவிஸ் கலாநிக் விலகியபோதும் இவர் (ஆண்டி ஜாஸி) பெயர் சந்தையில் விவாதிக்கப்பட்டது. தற்போது அமேசான் சி.இ.ஓவாக பொறுப்பேற்க இருக்கிறார்.
20 கோடி டாலர் கூடுதல் பங்குகள்
அடுத்த பத்தாண்டுகளுக்கு 20 கோடி பங்குகளை புதிய தலைமைச் செயல் அதிகாரிக்கு வழங்க அமேசான் திட்டமிட்டிருக்கிறது. ஜூலை 5-ம் தேதி இவருக்கென 61,000 பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும். அதே சமயம் இந்த பங்குகள் எத்தனை நாட்களுக்கு வைத்திருக்க வேண்டும், எப்போது ரொக்கமாக்க முடியும் என்பது உள்ளிட்ட தகவல்களை நிறுவனம் தெரிவிக்கவில்லை. இவரது அடிப்படை சம்பளம் 1.75 லட்சம் டாலராக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. நிறுவனத்தின் சராசரி சம்பளம் 29007 டாலர்கள் ஆகும். தவிர ஏற்கெனவே கொடுக்கப்பட்ட பங்குகளில் 4.5 கோடி டாலர் மதிப்பிலான பங்குகளை ஜாஸி தற்போது மாற்றிக்கொள்ள முடியும்.
ஆனால் போட்டி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளின் ஒப்பிடும்போது இந்த தொகை குறைவு.
சவால் என்ன?
தற்போது சர்வதேச அளவில் நான்காவது பெரிய நிறுவனமாக அமேசான் இருக்கிறது. 1.7 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பு உடைய நிறுவனமாக அமேசான் இருக்கிறது. இந்த நிறுவனத்தை வளர்ப்பது முக்கியம். அதைவிட முக்கியம் இதே நிலையில் தொடரவைப்பது. இதுவே பெரும் சவாலாக இருக்கும். இதைவிட முக்கியம் சர்வதேச அளவிலான செயல்பாடுகள் 13 லட்சம் பணியாளர்கள் என முதல் நாளே பெரும் சவால்கள் காத்திருக்கிறது. வெப்சர்வீஸ் சேவை ஏற்கெனவே இவர் கட்டுப்பாட்டில் இருப்பதால் அந்த பிரிவில் எந்த சிக்கலும் இருக்காது என்றே தெரிகிறது. இது தவிர இ-காமர்ஸ், மீடியா, ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் உள்ளிட்ட சில பிரிவுகளை கவனிக்க வேண்டியிருக்கும்.
தலைவர்கள் விலகினாலும் டெக் நிறுவனங்களில் உள்ள அடுத்த கட்ட தலைவர்கள் சிறப்பாக வழிநடத்தி சென்றிருக்கிறார்கள். ஆப்பிள் நிறுவனத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு பிறகு டிம் குக், மைக்ரோசாப்டை எடுத்துக்கொண்டால் ஸ்டீவ் பால்மருக்கு பிறகு சத்யா நாதெள்ளா, கூகுளை எடுத்துக்கொண்டால் லாரி பேஜ்-க்கு பிறகு சுந்தர் பிச்சை என ஒவ்வொருவரும் அடுத்தக்கட்டத்துக்கு நிறுவனத்தை வளர்த்தெடுத்திருக்கிறார். இந்த பட்டியலில் ஆண்டி ஜாஸி இணைவாரா என்பது இன்னும் சில ஆண்டுகளில் தெரிந்துவிடும்.