மக்களவையில் எம்.பி.யாக பிரதமர் மோடி உறுதிமொழி ஏற்றார். அப்போது ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அரசியல் அமைப்பு சட்ட புத்தகத்தை காட்டி மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
18-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிறது. முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். அவர் பேசுகையில்,”நாடாளுமன்ற மக்களாட்சியில் இன்று பெருமைமிகு நாள், இது பெருமைக்குரிய நாள் என்று நாடாளுமன்ற வளாகத்தில் அவர் கூறினார். சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக, நமது புதிய நாடாளுமன்றத்தில் இந்தச் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளப்படுகிறது, இது வரை பழைய நாடாளுமன்றத்தில் இந்தச் செயல்முறை நடந்து வந்தது. இந்த முக்கியமான நாளில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களையும் நான் வரவேற்கிறேன், அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்தார்.
எமர்ஜென்சி குறித்து பேசிய பிரதமர் மோடி, “ காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த எமர்ஜென்சியானது நாளை ஜூன் 25ம் தேதி 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்திய ஜனநாயகத்தின் மீதான அந்த கறை 50 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. காங்கிரஸ் எமர்ஜென்சி கொண்டு வரப்பட்டபோது, இந்திய அரசியல் சாசனம் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டது. அரசியலமைப்பின் ஒவ்வொரு பகுதியும் துண்டு துண்டாக கிழிக்கப்பட்டது. நாடு சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. ஜனநாயகம் முற்றிலுமாக நசுக்கப்பட்டதை இந்தியாவின் புதிய தலைமுறை ஒருபோதும் மறக்காது. அரசியலமைப்புச் சட்டம், இந்திய ஜனநாயகம் மற்றும் ஜனநாயக மரபுகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், 50 ஆண்டுகளுக்கு முன்பு செய்ததை இந்தியாவில் யாரும் செய்யத் துணிய மாட்டார்கள் என்று நாட்டு மக்கள் உறுதிமொழி எடுப்பார்கள்.
துடிப்பான ஜனநாயகத்தை உறுதி செய்வோம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி சாமானியர்களின் கனவுகளை நிறைவேற்ற உறுதிமொழி எடுப்போம்.” என்றார்.
2047-க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க இலக்கு:
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவின் சாமானியர்களின் தீர்மானங்களை நிறைவேற்றவே இந்த நாடாளுமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய உற்சாகம், புதிய வேகம் மற்றும் புதிய உயரங்களை அடைய இது ஒரு வாய்ப்பு. 2047க்குள் வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்பும் நோக்கில் 18வது மக்களவை இன்று தொடங்குகிறது.
உலகின் மிகப்பெரிய தேர்தல் மிகவும் பிரமாண்டமான முறையில், மிகவும் கம்பீரமாக நடத்தப்பட்டது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை. 65 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களித்தனர். சுதந்திரத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரு அரசாங்கத்திற்கு சேவை செய்யும் வாய்ப்பை நாட்டு மக்கள் வழங்கியுள்ளதால், இந்தத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.” என்று பேசினார்.
அரசாங்கத்தை நடத்துவதற்கு பெரும்பான்மை தேவை:
மேலும் அரசியலமைப்பு பற்றி பேசிய மோடி, “கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் எப்போதும் ஒரு பாரம்பரியத்தை பின்பற்ற முயற்சித்தோம். நாட்டை நடத்துவதற்கு ஒருமித்த கருத்து மிக முக்கியமானது. எனவே, அனைவரின் சம்மதத்துடன், அனைவரையும் அழைத்துச் செல்வதன் மூலம், அன்னை பாரதத்திற்கு சேவை செய்வதும், 140 கோடி மக்களின் அபிலாஷைகளையும் லட்சியங்களையும் நிறைவேற்றுவதும் எங்களது தொடர் முயற்சியாக இருக்கும். அரசியலமைப்பின் புனிதத்தைப் பேணி, முடிவெடுப்பதை விரைவுபடுத்தும் அதே வேளையில் அனைவரையும் அழைத்துச் சென்று முன்னேற விரும்புகிறோம்.” என்று தெரிவித்தார்.