தெலங்கானாவில் பல்கலைக்கழகத்தை அமைக்க அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி 100 கோடி ரூபாய் அறிவித்த நிலையில், அதை ஏற்க காங்கிரஸ் தலைமையிலான அரசு மறுத்துவிட்டது. 


சோலார் எனர்ஜி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு, 250 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் கொடுக்க திட்டமிட்டதாக, உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானி மீது அமெரிக்க நீதித்துறை குற்றம்சாட்டியது.


100 கோடி நன்கொடையை வாங்க மறுத்த காங்கிரஸ் அரசு:


ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்து வருகிறது. குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை என கூறி வருகிறது. இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தக் கோரி இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 


அதானி மீது அமெரிக்க வைத்துள்ள இந்த குற்றச்சாட்டுகள், உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் அதானி விவகாரத்தை முன்வைத்து மத்திய அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை வைத்து வருகிறது.


இப்படிப்பட்ட சூழலில், தெலங்கானாவில் யங் இந்தியா திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகத்தை அமைக்க அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி 100 கோடி ரூபாய் அறிவித்திருந்தார். தற்போது, ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு, அதை ஏற்க மறுத்துவிட்டது.


 






அதிர்வலைகளை ஏற்படுத்தும் அதானி விவகாரம்:


இதுகுறித்து முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறுகையில், "அதானியின் அறிவிப்பு தேவையற்ற விவாதங்களுக்கு வழிவகுத்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்றார். செய்தியாளர்களிடம் இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "நன்கொடை ஏற்றுக்கொள்ளப்பட்டால் அது மாநில அரசு அல்லது முதலமைச்சருக்கு தருவது போன்ற தோன்றத்தை அளிக்கலாம்.


அதானி அறிவித்த தொகை, அதானி குழும நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். இருப்பினும், எந்தவொரு சர்ச்சை அல்லது குற்றச்சாட்டுகளிலிருந்தும் விலகி இருக்க மாநில அரசு பணத்தை எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம்.


அதானி குழுமம் உட்பட எந்த ஒரு நிறுவனத்திடமிருந்தும் ஒரு ரூபாய் கூட தெலங்கானா அரசு வாங்கவில்லை" என்றார்.