தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் பிரசாரத்துக்கு சென்ற அம்மாநில முதலமைச்சரின் மகனும், அமைச்சருமான கே.டி.ராமாராவின் வாகனம் விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் 5 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வருகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே அங்கு வரும் நவம்பர் 30 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்பட உள்ளது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறுகிறது. அதில் தெலங்கானா தேர்தலும் ஒன்று.
அந்திராவில் இருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு தனி தெலங்கானா மாநிலம் உருவானது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாரத் ராஷ்ட்ரிய ஷமிதி கட்சி பெருவாரியாக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. முதலமைச்சராக சந்திரசேகர ராவ் பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் மீண்டும் பாரத் ராஷ்ட்ரிய ஷமிதி கட்சியே வெற்றி பெற்று சந்திரசேகர ராவ் 2வது முறையாக முதல்வராக பதவி வகித்து வந்தார்.
இப்படியான நிலையில் தான் அங்கு சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் வெற்றியை பெற்று தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாரத் ராஷ்ட்ரிய ஷமிதி கட்சி மிக தீவிரமாக செயல்பட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த கட்சிக்கு சவால் விடும் வகையில் காங்கிரஸ்,பாஜக கட்சிகளும் வியூகங்களை அமைத்துள்ளது. கருத்து கணிப்பு முடிவுகளும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளது. இந்நிலையில் மாநில முதலமைச்சரின் மகனும், அமைச்சருமான கே.டி.ராமாராவின் வாகனம் விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் தற்போது சிர்சிலா தொகுதியில் எம்.எல்.ஏ.வாக உள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதே தொகுதியில் தான் போட்டியிட கே.டி.ராமராவ் மனுத்தாக்கல் செய்துள்ளதோடு தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மற்ற வேட்பாளர்களையும் ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கே.டி.ராமராவ் தெலங்கானாவில் உள்ள ஆர்மூர் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது பிரசார வாகனத்தின் மேல்பகுதியில் அவர் மற்றும் கட்சி நிர்வாகிகள் நின்று பொதுமக்களையும், தொண்டர்களையும் பார்த்தபடி கையசைத்து சென்றனர்.
திடீரென அவர்கள் சென்ற வாகனத்தின் டிரைவர் பிரேக் பிடிக்க, மேலே இரும்பு தடுப்பில் நின்ற நிர்வாகிகள் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தனர். ஆனால் கே.டி.ராமாராவை அவரது பாதுகாவலர்கள் உஷாராக பின்னால் இருந்து பிடித்து கொண்டதால் அவர் கீழே விழாமல் வாகனத்தில் தொங்கியபடி இருந்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது