3 வயது பெண் குழந்தையை தந்தை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சி காண்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தச் சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.


தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர், மேடக் நகராட்சியில் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர், முதல் மனைவியை பிரிந்து இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அவர் தனது முதல் மனைவியிடமிருந்து தனது மகளை தன்னுடன் வைத்து பராமரித்து வந்தார். 


இந்த நிலையில், அந்த பெண் குழந்தையை தந்தை நாகாராஜூ கொடூரமாக வீடியோ காட்சி ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது. வீடியோவில்,  நாகராஜு குழந்தையை கயிற்றால் அடித்து, அறைந்து, தரையில் வீசி எறிவதை காணலாம். இந்த வீடியோ பக்கத்தில் வீட்டில் இருப்போர் எடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


 






சமூகவலைதளங்களில் பரவிய வீடியோவில் சிறுமியை அடிக்கும்போது, இரண்டாவது மனைவி சிரித்துக்கொண்டிருக்கிறார்.  தந்தை பலமுறை குழந்தையை அடிக்கிறார். இரண்டாவது மனைவியை மகிழ்ச்சியடையச் செய்ய தந்தை குழந்தையை அடித்ததாகவும், குழந்தை சாப்பிட மறுத்ததால் அடித்ததாகவும் கூறப்படுகிறது.


வீடியோ வைரலானதை தொடர்ந்து, மேடக் நகர் போலீசார், அந்த குழந்தையை மீட்டனர். தாமாகமுன்வந்து தந்தை நாகாராஜூ மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே, நாகராஜூ தலைமறைவாகிவிட்டதால் அவரை தேடி வருகின்றனர்.


கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், சிறுமி உணவு சாப்பிட மறுத்ததால் அடித்ததாக  இரண்டாவது மனைவி எங்களிடம் கூறியதாகவும், தந்தை தலைமறைவாக இருப்பதால், தங்களுக்கு இன்னும் முழு விவரங்கள் கிடைக்கவில்லை எனவும் மேடக் நகர சப்-இன்ஸ்பெக்டர் சிவ பிரசாத் ரெட்டி கூறினார்.


 






பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறையினர் சிறுமி மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறினர். குழந்தையின் பாதுகாப்பு மற்றும் தந்தைக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம் என்றும் தெரிவித்தனர். மேலும், குழந்தையை தாயிடம் ஒப்படைக்க பரிசீலித்து வருவதாகவும் கூறினர்.