தெலங்கானாவில் 35 பயணிகளுடன் அரசு பேருந்தை கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் ஒருவர் தெலங்கானா அரசுப் போக்குவரத்து துறை சார்பில் (Telangana State Road Transport Corporation (TSRTC)) தேர்வு செய்யப்பட்ட ஓட்டுநர் போல அரசு பேருந்தில் ஏறி அதை இயக்கியிருக்கிறார். சித்திப்பேட் பேருந்து நிலையத்தில் 35 பயணிகளுடன் நின்றுகொண்டிருந்த பேருந்தில் திடீரென ஒருவர் ஏறி பேருந்தை இயக்கியிருக்கிறார். கடந்த ஞாயிறு அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர் பேருந்து திங்கள் காலை ஐதராபாத் சென்று சேரும் என்று பயணிகளிடம் சொல்லியிருக்கிறார். அரசு பேருந்து என்பதால் பயணிகளுக்கு எந்த சந்தேகமும் ஏற்படவில்லை.
காயலான் கடையில் போட திருடிய திருடன்:
ஆனால், பேருந்தில் டிக்கெட் வழங்குபவர் இல்லை என்பது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பயணிகளை சமாளித்து அவர்களிடமிருந்து டிக்கெட் தொகையை மட்டும் அந்த நபர் வாங்கியிருக்கிறார். கொஞ்சம் நேரத்தில் டிக்கெட் கொடுக்கப்படும் என்று அவர் சொல்லியிருக்கிறார்.
பேருந்து சுமார் 50 கி.மீ தூரம் வரை பயணித்துள்ளது. திடீரென டீசல் தீர்ந்துபோனாதால் பேருந்து பாதி வழியில் நின்றுவிட்டது. இந்த நிலைமை குறித்து பயணிகளிடம் விளக்கியுள்ளார். பேருந்து நடுவழியில் நின்றதால் மக்கள் அதிர்ச்சியடைந்து ஓட்டுநரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தப் பேருந்தை காய்லான் கடையில் போடுவதற்காக திருடி எடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
திருடப்பட்ட பேருந்து:
இந்நிலையில், அந்த நபர் பேருந்தை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார். பேருந்தை திருட வந்த நபரை பயணிகள் வீடியோ எடுத்துள்ளனர் இதற்கிடையில் நிறுத்தி வைத்திருந்த பேருந்தை காணவில்லை என அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்கள் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனார். சிரிசிலா பகுதியில் தொடங்கி ஜூப்ளி பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்த பேருந்து இரவு உணவுக்கு சாப்பிடுவதற்காக சித்திப்பெட் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.