கடந்த சில நாட்களாக இந்தியாவில் தக்காளி விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.100ஐ கடந்து விற்பனையாவதால் தக்காளியை பதுக்குவதும், அதை திருடுவதுமான செயல்கள் அதிகரித்து வருகின்றன. பருவமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்து விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நியாயவிலை கடைகள் மூலம் தக்காளி விற்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


விஸ்கியையும் சிக்கனையும் அளித்த அரசியல் கட்சியின் மூத்த நிர்வாகி:


இந்த நிலையில், கடந்தாண்டு தனது ஆதரவாளர்களுக்கு விஸ்கியும் சிக்கனையும் கொடுத்து சமூக வலைதளத்தில் பிரபலமான பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் (பி.ஆர்.எஸ்) மூத்த நிர்வாகி, இந்த முறை தக்காளிகளை கொடுத்து ட்ரெண்டாகியுள்ளார். தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் கட்சியின் மூத்த நிர்வாகி ராஜனாலா ஸ்ரீஹரி.


கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இவர், தனது ஆதரவாளர்களுக்கு விஸ்கி மற்றும் சிக்கனை அளித்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. இந்த சூழலில், இன்று, தெலங்கானா அமைச்சரும், சந்திரசேகர ராவின் மகனுமான கே.டி.ராமாராவின் பிறந்தநாளை முன்னிட்டு, தக்காளியை தனது ஆதரவாளர்களுக்கு  ஸ்ரீஹரி இலவசமாக வழங்கியுள்ளார்.


இன்ப அதிர்ச்சியில் மக்கள்:


பிங்க் நிற பிளாஸ்டிக் கூடைகளுக்குள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள தக்காளிகளை பெரிய மேஜையின் முன் நின்று, நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஸ்ரீஹரி வழங்குவது வீடியோவில் பதிவாகியுள்ளது. பி.ஆர்.எஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நிறம் பிங்க் நிறம் என்பது குறிப்பிடத்தக்கது.


தக்காளிகளை இலவசமாக வழங்கியிருப்பதன் மூலம் ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை அடித்துள்ளார் ஸ்ரீஹரி. ஒன்று, கே.டி.ராமாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பது. இரண்டாவது, ஆதரவாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். மூன்றாவது, விலை உச்சம் தொட்ட நேரத்தில், மக்களுக்கு உதவு செய்திருப்பது.


அரசாங்கத்தின் விவசாய சந்தைப்படுத்தல் நிறுவனமான இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு லிமிடெட் (NCCF) இன்று டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த நெட்வொர்க் (ONDC) மூலம் தக்காளியை கிலோவுக்கு 70 ரூபாய் மானிய விலையில் விற்பனை செய்யத் தொடங்கியது.


இதுகுறித்து NCCFஇன் நிர்வாக இயக்குநர் அனிஸ் ஜோசப் சந்திரா கூறுகையில், "டெல்லி என்சிஆரில் தக்காளி விற்பனைக்காக ONDC உடன் கூட்டு சேர்ந்துள்ளோம். நுகர்வோருக்கு கூடுதல் செலவு இல்லாமல் வீட்டு வாசலில் டெலிவரி செய்யப்படும்" என்றார். நுகர்வோர் தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை ஆர்டர் செய்யலாம். அடுத்த நாள், தக்காளி டெலிவரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 






தக்காளி விலை உயர்வின் காரணமாக கர்நாடகாவை சேர்ந்த விவசாயிடம் இருந்து 2.5 டன் தக்காளியை தம்பதியினர் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.