கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், புதுமை பெண் திட்டம், மகளிர் உரிமை தொகை, மகளிருக்கு விலையில்லா பேருந்து பயணம் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.


நாட்டுக்கே முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு:


தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நல திட்டங்கள் சமூகத்தில் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. எனவே, இந்த திட்டங்களை மற்ற மாநில அரசுகள் செயல்படுத்தி வருவதும் தொடர்கதையாகி வருகிறது. சென்னையில் மகளிருக்கான விலையில்லா பேருந்து பயண திட்டத்தை போன்றே கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு சக்தி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.


தமிழ்நாட்டை போன்றே சக்தி திட்டத்தின் மூலம் கர்நாடகாவில் பல பெண்கள் பயன் அடைந்து வருகின்றனர். இதேபோல, தமிழ்நாட்டில் திமுக அரசாங்கம் செயல்படுத்தி வரும் மற்றொரு திட்டம் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. அதுதான், தமிழ்நாடு அரசின் காலை உணவு திட்டம்.


தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டமே, காலை உணவு திட்டம் என அழைக்கப்படுகிறது. முதற்கட்டமாக, சில மாநகராட்சிகள், நகராட்சிகள் சில கிராமங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. தற்போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.


ஸ்டாலின் ஃபார்முலாவை கையில் எடுத்த கேசிஆர்:


தற்போது, இந்த திட்டம் தெலங்கானாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் ஃபார்முலாவை தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் கையில் எடுத்துள்ளார். முதற்கட்டமாக, தெலங்கானாவில் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. 


தசரா விடுமுறைக்கு பின், 1 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ரவிரியாலாவில் உள்ள ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளியில், தெலங்கானா நிதியமைச்சர் டி. ஹரீஷ் ராவ், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் பட்னம் மகேந்தர் ரெட்டி, கல்வித்துறை அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி ஆகியோர் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.


தெலங்கானாவில் உள்ள 119 தொகுதிகளிலும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களால் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் ஒரே நேரத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர்கள், மாணவர்களுடன் சேர்ந்து காலை உணவை சுவைத்தனர்.


தெலங்கானாவில் எதிரொலிக்கும் திராவிட மாடல்:


திட்டத்தின் பலன்களை எடுத்துரைத்து பேசிய அமைச்சர் ஹரீஷ் ராவ், "இதன் மூலம் 20 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் ஒரே மாநிலம் தெலுங்கானா ஆகும். இது பள்ளிக் கல்வியில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். 


அரசுப் பள்ளிகளில் சேரும் குழந்தைகளில் பெரும்பாலானோர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்பதால், குழந்தைகளுக்கு உணவு அளிக்க வேண்டும் என கவலைப்படாமல் சரியான நேரத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்களுக்கு இது உதவும்" என்றார்.


முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்து பேசிய அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி, "மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் சத்தான உணவைப் பெறவும், மாணவர்கள் இடையிலேயே பள்ளியில் இருந்து நிற்பதை தடுக்கவும் இந்தத் திட்டம் உதவும். ஒவ்வொரு 10 மாணவர்களில் இரண்டு மாணவர்கள் மட்டுமே காலை உணவை சாப்பிடுகிறார்கள். மீதமுள்ளவர்கள் வெறும் வயிற்றில் பள்ளிகளுக்கு வருகிறார்கள் என்பதை அதிகாரிகளுடனான சந்திப்பின் போது உணர்ந்தேன்.


மதிய உணவு திட்டம் நாடு முழுவதும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் தெலுங்கானா அரசாங்கம் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த திட்டத்தின் பலனை விரிவுபடுத்தியுள்ளது. இரும்புச்சத்தை மேம்படுத்த வெல்லமும் வழங்கப்படுகிறது" என்றார்.


அரசு உதவி பெறும், மதரஸாக்கள் உட்பட 28,000 பள்ளிகளில் 23 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்த திட்டத்தால் பயனடைவார்கள். உணவை செய்யும் பொறுப்பு நகர்ப்புறங்களில் அக்சய பாத்ரா பவுண்டேஷனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கிராமப்புறங்களில் சுயஉதவி குழுக்களுக்கு இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இத்திட்டத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.400 கோடி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இட்லி, பொங்கல், பூரி, உப்மா, காய்கறி புலாவ், கோதுமை உப்மா, சாம்பார், சட்னி ஆகியவை வழங்கப்படுகிறது.