தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தியா ராணி. இவர், இவர் ஹைதராபாத் காவல்துறையில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். 30 வயதான இவருக்கும், ஹைதராபாத்திற்கு வேலை தேடி வந்த சரண்தேஜ் என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறியது. சந்தியாராணி பற்றி எதுவும் தெரியாமல் பழகி வந்த சரண்தேஜிற்கு பின்னர்தான் சந்தியாராணி ஏற்கனவே மூன்று முறை திருமணமானவர் என்ற அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டு திருமணங்கள் விவகாரத்தில் முடிந்த நிலையில், ஒரு கணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதும் சரண்தேஜுக்கு தெரியவந்துள்ளது. மேலும், சந்தியாராணிக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதையும் அறிந்த சரண்தேஜ், சந்தியாராணியுடனான காதலை முறித்துக்கொள்ள முயற்சித்துள்ளார்.




ஆனால், சந்தியாராணி சரண் தேஜ் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சரண்தேஜிடம் நாம் இருவரும் நெருக்கமாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். மேலும், தன்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால் சாதியை காரணம் காட்டி திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சரண்தேஜின் வாழ்க்கையையே நாசம் செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.


இதனால், சந்தியா ராணியின் மிரட்டலுக்கு பயந்து வேறு வழியின்றி அவரை சரண்தேஜ் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு வீடு ஒன்றில் இருவரும் ஜோடியாக தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். திருமணத்திற்கு பிறகும் சரண்தேஜை தொடர்ந்து சந்தியாராணி மிரட்டியும், கொடுமைப்படுத்தியும் வந்துள்ளார். திருமணத்திற்கு முன்பு பார்த்து வந்த வேலையை விடுமாறு சரண்தேஜை தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார் சந்தியாராணி. சரண்தேஜ் இந்து மதத்தைச் சேர்ந்தவர். சந்தியாராணி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். இதனால், சரண்தேஜையும் தான் சார்ந்துள்ள கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிடுமாறும் வற்புறுத்தியுள்ளார். சந்தியாராணியின் வற்புறுத்தலுக்கு சரண்தேஜ் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். 


இதனால் ஆத்திரம் அடைந்த சரண்தேஜை, வீட்டிற்குள்ளேயே பூட்டி வைத்து சந்தியாராணி அடித்தும், சித்திரவதைப்படுத்தியும் கொடுமைப்படுத்தியும் வந்துள்ளார். சந்தியாராணியின் கொடுமை தாங்க முடியாத சரண்தேஜ் ஹைதராபாத் காவல் ஆணையருக்கும், அருகில் இருந்த செம்ஷாபாத் காவல் நிலையத்திற்கும் தனது செல்ஃபோன் மூலமாக வாட்ஸ் அப்பில் தன்னுடைய நிலைமையை கண்ணீருடன் வீடியோவாக பதிவு செய்து  புகார் அளித்துள்ளார்.  மேலும், சந்தியாராணியிடம் இருந்து உடனடியாக தன்னை காப்பாற்றுமாறும் வேண்டியுள்ளார். இதையடுத்து, விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் சரண்தேஜை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர், மேலும், சந்தியாராணியிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சந்தியாராணி மீது ஏற்கனவே ஜூப்ளி காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. சந்தியாராணியை காவல்துறை பணியில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என்றும் சரண்தேஜ் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.