கொரோனா வார்டுகளில் கருப்புப் பூஞ்சை நோய் பாதிப்பு இருக்கிறதா? ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது எப்படி? வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது எய்ம்ஸ்

 

கருப்புப் பூஞ்சை பாதிப்பை அறிவிக்கப்படவேண்டிய நோயாக பட்டியலிட மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிய நிலையில், கொரோனா வார்டுகளில் கருப்புப் பூஞ்சை பாதிப்பு இருக்கிறதா என்பதை ஆரம்ப நிலையிலே கண்டறிவதற்கான வழிகாட்டு நெறிமுகளை எய்ம்ஸ் மருத்துவமனையின் கண் சிகிச்சை பிரிவு வெளியிட்டிருக்கிறது.

 

கொரோனா சிகிச்சை வார்டில் கருப்புப் பூஞ்சை பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய ஹை ரிஸ்க் கொண்டவர்கள் யார்?

 

கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் ஸ்டீராய்டு மருந்த்து செலுத்தப்பட்டவர்கள், நீரிழிவு நோய் மற்றும் புற்றுநோய் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் இந்தத் தொற்று ஏற்படக் கூடிய ஹை ரிஸ்க் பட்டியலில் இருப்பவர்கள். ஆகையால் அவர்களிடம் ஏதேனும் அறிகுறி தெரிகிறதா எனத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

 

கண்காணிப்பட வேண்டிய நோயாளிகள் எவர்?

 

* கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய் கொண்டவர்கள், டயபட்டீஸ் கீட்டோசிடோசிஸ் இருக்கும் ஸ்டீராய்டு அல்லது டோசிலிசுமாப் செலுத்தப்பட்ட நோயாளிகள்.

 

* புற்றுநோய் சிகிசையில் இருப்பவர்கள் அல்லது நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.

 

* நீண்ட காலமாக ஸ்டீராய்டு அல்லது டோசிலிசுமாப் மருந்து எடுத்துக் கொள்பவர்கள்.

 

* தீவிர கரோனா தொற்றாளர்கள்.

 

* ஆக்சிஜன் உதவி, மாஸ்க், வெண்டிலேட்டரில் இருப்பவர்கள்

 

ஆகியோரை கருப்புப் பூஞ்சை பாதிப்பு ஏற்படுகிறதா எனத் தீவிரமாகக் கண்காணிக்குமாறு எய்ம்ஸ் வழிகாட்டியுள்ளது.

 

இத்தகைய நோயாளிகளை கண்நோய் சிகிச்சை நிபுணர்கள் வாரம் ஒருமுறையேனும் சோதித்து ஏதேனும் தேவையற்ற திரவ வெளியேற்றம் இருக்கிறதா எனக் கண்காணிக்க வேண்டும். நோயாளிகள் கரோனாவிலிருந்து குணமடைந்த பின்னரும் ஒவ்வொரு 2 முதல் 6 வாரங்களுக்குள் ஒரு முறை என மூன்று மாதங்கள் வரை கண்காணிக்க வேண்டும்.

 

நோயாளிகளும் அவர்களின் உதவியாளர்களும் கவனிக்க வேண்டியது என்ன?

 

கருப்புப் பூஞ்சை பாதிப்பு ஏற்படுத்துகிறதா என சுய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள நோயாளிகள் கவனத்திற்கு..

 

 * மூக்கிலிருந்து கருப்பு நிற திரவம் அல்லது ரத்தம் கசிதல் 

 

* மூக்கடைப்பு 

 

* தலைவலி அல்லது கண்களில் வலி 

 

* கண்களைச்சுற்றி வீக்கம். பார்வை இரண்டாகத் தெரிதல், கண்கள் சிவத்தல், பார்வை இழப்பு, கண்களை மூடுவதில் சிக்கல், கண்களைத் திறப்பதில் சிக்கல் போன்ற அறிகுறிகள்.
  

 

* முகத்தில் மதமதப்பு அல்லது கூச்ச உணர்வு ஏற்படுதல், உணவு உண்ண வாயைத் திறப்பதில் சிரமம், உணவை மென்று சுவைப்பதில் சிரமம். 

 

மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டால் உடனே அவர்கள் மருத்துவர்களை நாட வேண்டும். காது, மூக்கு, தொண்டை நிபுணர் அல்லது கண் நோய் சிகிச்சை நிபுணரை அணுகலாம். மிக முக்கியமான விஷயம் அறிகுறிகள் கொண்டோர் தாமாகவே ஆன்ட்டிபயாடிக் மருந்துகள், ஆன்ட்டிஃபங்கல் மருந்துகள் எடுத்துக்கொள்ளக்கூடாது.