தெலங்கானா மாநிலத்தின் சேகந்திராபாத் பகுதியில் ஒரு மின்சார பைக் ஷோரூம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஷோரூமில் நேற்று இரவு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஷோ ரூமில் இருந்த மின்சார வாகனங்கள் வெடித்து தீ மற்றும் புகை பெருமளவில் பரவியுள்ளது. இந்த விபத்து நடைபெற்ற ஷோரூமின் மேல் மாடியில் ஒரு விடுதி ஒன்று செயல்பட்டு வந்துள்ளது.
இந்த தீ விபத்தின் போது அந்த விடுதிக்குள் சுமார் 25 பேர் இருந்ததாக தெரிகிறது. அவர்களில் தற்போது வரை 7 பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் மீட்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த விபத்திற்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இந்த பைக் ஷோரூமிலிருந்த ஜெனரேட்டர் வெடிப்பு அல்லது பைக் பேட்டரி வெடிப்பு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த தீ விபத்து தொடர்பாக ஹைதராபாத் காவல்துறை ஆணையர் சி.வி.ஆனந்த், “நேற்று இரவு 9.20 மணியளவில் இந்தப் பகுதியில் தீ ஏற்பட்டதாக தகவல் வந்தது. அந்த தகவலைத் தொடர்ந்து இங்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டது. அந்த வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து இந்த பைக் ஷோரூம் மேலே இருந்த ஓட்டலில் சுமார் 25 பேர் சிக்கியிருந்தனர். அவர்களை மீட்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டோம். இந்த தீயை விட அதன்காரணமாக ஏற்பட்ட புகை காரணமாக பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் சிலர் உயிரிழந்தனர். மேலும் சிலரை நாங்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்துள்ளோம். மேலும் இந்தக் கட்டடத்தில் அவசரகாலத்தில் வெளியேறும் இடம் வசதி இல்லாத காரணத்தால் மீட்புப் பணிகள் சற்று கடினமாக அமைந்தது. அத்துடன் சிக்கியுள்ளவர்கள் வெளியேறவும் சிரம்மாக அமைந்தது” எனத் தெரிவித்துள்ளார்.