பெங்களூருவில் போகுவரத்து நெரிசலில் சிக்கிய மருத்துவர் , 3 கி.மீ தூரம் ஓடிச்சென்று அறுவை சிகிச்சை செய்த சம்பம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பெங்களூருவில் தினம்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பற்றி சொல்லவே தேவையில்லை . 5 நிமிடத்தில் அடைய வேண்டிய இடத்திற்கே அரை மணி நேரம் ஆகும். அதுவும் மழைக்காலங்கள் என்றால் உரிய நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் எக்குத்தப்பாக சிக்கிக்கொள்வார்கள் வாகன ஓட்டிகள் . இந்த நிலையில் பெங்களூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில்  பணிபுரியும் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் கோவிந்த் நந்தகுமார் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி அறுவை சிகிச்சை ஒன்று செய்ய வேண்டியிருந்தது. அவர் சரியான நேரத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டிருந்தாலும் கூட கனமழை எதிரொலியாக , எதிர்பாராத டிராஃபிக்கில் சிக்கிக்கொண்டார். வெகு நேரமாகியும் , தனது கார் சர்ஜாபூர்-மரதல்லி சாலை போக்குவரத்து நெரிசலில் இருந்து நகரவே இல்லை.





அவசர லேப்ராஸ்கோபிக் பித்தப்பை அறுவை சிகிச்சை செய்ய நோயாளியை மருத்துவமனை குழு தயார் செய்ய , அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய மருத்துவர் நந்த குமார் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டார். அவசரகால அறுவை சிகிச்சை என்பதால் , காலதாமதம் நோயாளிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த மருத்துவர் , அங்கிருந்து 3 கி.மீ தூரம் ஓடிச்சென்று மருத்துவமனையை அடைந்து பின்னர் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.


 






இது குறித்து மருத்துவர் நந்தகுமார் கூறுகையில் “ நான் ஒவ்வொரு நாளும் மத்திய பெங்களூரிலிருந்து பெங்களூரின் தென்கிழக்கில் உள்ள மணிப்பால் மருத்துவமனைக்கு பயணம் செய்கிறேன். அறுவை சிகிச்சைக்கு சரியான நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறினேன்.  அறுவை சிகிச்சை செய்ய எனது குழு தயாராகி விட்டது. அதிக ட்ராஃபிக்கை பார்த்து டிரைவரிடம் வண்டியை விட்டுவிடலாம் என்று முடிவு செய்து  யோசிக்காமல் மருத்துவமனையை நோக்கி ஓடினேன்.” என்றார்.




நந்தகுமார் மருத்துவமனையை அடைந்தவுடன் , நோயாளிக்கு மயக்க மருந்து  செலுத்தப்பட்டு , அடுத்தடுத்த செயலில் அவரது குழுவினர் இயங்க தொடங்கினர். மருத்துவமனை உள்ளே சென்றதுமே உடையை மாற்றிக்கொண்டு சிகிச்சையை துவங்கியிருக்கிறார். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளி தற்போது வெற்றிகரமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை தரப்பு கூறுகிறது.டாக்டர் நந்தகுமார் மணிப்பால் மருத்துவமனைகளில் காஸ்ட்ரோஎன்டாலஜி ஆலோசகராக பணிபுரிகிறார். நீண்ட நாட்களாக பித்தப்பை நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் நோயாளிக்கு அவர் சிகிச்சை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.