திருமணம் முடிந்த இருபதே நாட்களில் கணவருடன் சண்டைபோட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்த மகளையும், மகளுக்கு ஆதரவாக பேசிய தாயாரையும் கட்டையால் அடித்துக் கொன்ற தந்தை.


தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஜெயினல்லிப்பூர் கிராமத்தினைச் சேர்ந்த கிருஷ்ணப்பா மற்றும் கமலம்மாவின் மகள் சரஸ்வதி திருமணமான இருபதே நாட்களில் கணவருடன் கருத்து வேறுபாட்டால்  தாய் வீட்டுக்கு வந்த மகளையும், மகளுக்கு ஆதரவாக பேசிய தாயாரையும் கட்டையால் அடித்துக் கொன்ற தந்தை. இச்சம்பவத்தால் மகபூப்நகர் மாவட்டமே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.


சரஸ்வதிக்கு மே 8ம் தேதி அதே மாவட்டத்தினைச் சேர்ந்த இளைஞருடன் திருமணம் நடைபெற்றது.  இந்த திருமணத்தில் சரஸ்வதிக்கு  விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு சென்ற சரஸ்வதி, கணவருடனான கருத்து வேறுபாட்டால்  கடந்த வாரம் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். கணவரின் வீட்டிலிருந்து வந்தவர் இனி கணவரின் வீட்டுக்குப் போக மாட்டேன் என பிடிவாதமாக கூறியுள்ளார்.  சரஸ்வதியின் தந்தை கிருஷ்ணப்பா எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சித்தும் பலனளிக்கவில்லை. இதனால் கிருஷ்ணப்பா கடும் கோபத்தில்  இருந்து வந்துள்ளார்.  திருமணத்திற்கு அதிக செலவு செய்தது எல்லாம் வீண் என்ற மனநிலையில் இருந்த கிருஷ்ணப்பாவுக்கு எதிராக அவரது மனைவி கமலம்மாவும் மகளுக்கு ஆதரவாகவே பேசிவந்துள்ளார். இது கிருஷ்ணப்பாவை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கிருஷ்ணப்பாவுக்கும் கமலம்மாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்  தொடர்ந்து கோபத்தில் இருந்த கிருஷ்ணப்பா,  நன்கு மது அருந்திவிட்டு இரவு வீட்டிற்கு வந்துள்ளார்.  மூவருக்குமான கருத்து வேறுபாடு பெரும் குடும்பச் சண்டையாக உருவெடுத்துள்ளது.


  போதையில் இருந்த கிருஷ்ணப்பா தனது மனைவியையும் மகளையும் கட்டையால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்;  வலி தாங்க முடியாமல் சரஸ்வதியும் கமலம்மாவும் அலறியுள்ளனர். பின் அவர்கள் இறந்து விட்டதாக கருதிய கிருஷ்ணப்பாவும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கதினர் காவல்துறையினருக்கு தகவல் சொல்லியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மூவரையும் மீட்டு உள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.


மிகவும் கவலைக்கிடமாக இருந்த சரஸ்வதியும் கமலம்மாவும் உயர்சிகிச்சைக்காக ஹைதராபாத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். விஷம் அருந்தியதாக சொல்லப்பட்ட கிருஷ்ணப்பா அபாய நிலையினை கடந்து கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருகிறார்.


காவல்துறையினர் கிருஷ்ணப்பாவின் மீது கொலை வழக்கு பதிவு செய்து, சரஸ்வதி எந்த காரணத்திற்காக கணவரைப் பிரிந்து வந்தார்? வரதட்சணை கொடுமை நிகழ்த்தப்பட்டதா? என விசாரித்து வருகின்றனர். திருமணமான இருபதே நாட்களில் இப்படியான சோக சம்பவம் ஜெயினல்லிப்பூர் கிராமத்தினைச் சேர்ந்தவர்களை பெரும் சோகத்திற்கு ஆழ்த்தியுள்ளது.