கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட  முககவசம் அணிதல், சேனிடைசர் கொண்டு கைகளை சுத்தப்படுத்துதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை மீண்டும் நடைமுறைப்படுத்த டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகையே புரட்டிப்போட்ட கொரோனாவின் தாக்கம் சமீபகாலமாக குறைந்து வந்துள்ளது. ஆனால்  கொரோனா பரவலும் அதனால் ஏற்படும் உயிர் இழப்புகளும் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கொரோனா பரவல் இந்தியாவிற்குள் விமான நிலையங்கள் மூலமாகத்தான் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது. விதிமுறைகளை மீறுபவர்களை பயணம் செய்ய அனுமதிக்க கூடாது எனவும் விமானநிலையத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் எனவும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநகரத்திற்கு உத்தரவிட்டுள்ளது.






நீதிபதி சி. ஹரி சங்கர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு வழிமுறைகள்  குறித்து தானாக முன்வந்து வழக்கு போட்டதை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் விபின்  ஷங்கி மற்றும் சச்சின் டிட்டா ஆகியோர் விசாரித்தனர். இவ்வழக்கினை விசாரித்தவர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற உத்தரவிட்டுள்ளனர். உயர்நீதி மன்ற நீதிபதி கொல்கத்தாவிலிருந்து  டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்தபோது விமானப் பயணிகள் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியினை பின் பற்றாமல் மிகவும் அலட்சியமாக இருந்துள்ளனர்.  இதனைக் கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்த நீதிபதி வழக்கு தொடுத்தார்.


வழக்கினை விசாரித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநகரத்திற்கு உத்தரவினை நீதிபதி விபின் ஷங்கி கொரோனாகால விதிமுறைகளை பின்பற்ற உத்தரவிட்டுள்ளார். இந்த விதிமுறைகளை மீண்டும் மக்களை பின்பற்ற வைப்பதில் சிக்கல்கள் இருந்தாலும்  விமான நிலைய ஊழியர்கள் அனைவரும் இதனை தீவிரமாக கையாண்டு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். விதிமுறைகளைப் பின்பற்றாத பயணிகளை பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.   மேலும் மும்பையில் கொரோனா பரவல் அதிகமாகிக்கொண்டு இருப்பதை வாய்மொழியாகச் சொல்லி கவலைப்பட்டார். தொற்றுநோய் குறையவில்லை, மக்கள் கவனக்குறைவாக இருக்கும் ஒவ்வொரு முறையும் கொரோனா தனது கோரமுகத்தினை காட்டுகிறது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் கொரோனா குறித்தான பார்வை இந்தியா முழுவதும் பயத்தினை ஏற்படுத்தியுள்ளது.