Telangana Election 2023: தெலங்கானாவில் கச்சிபௌலி பகுதியில் 5 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானா தேர்தல்:
தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவுக்கான நாள் நெருங்கி வருகிறது. இதனால் ஒருபுறம் பரப்புரை அனல் பறக்க, மறுபுறம் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்கான பணப் பரிமாற்றமும் மும்முரமாக நடந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தீவிர வாகன சோதனை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதன் விளைவாக கணக்கில் காட்டப்படாத பணம் அதிகளவில் சிக்கியுள்ளது. இதுவரையிலான தகவலின் மூலம், தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததில் இருந்து தற்போது வரை தெலங்கானாவில் ரூ.650 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.
5 கோடி ரூபாய் பறிமுதல்:
வாக்களர்களுக்கு விநியோகிக்க பணம் கொண்டு செல்லப்படுவதாக, மடப்பூர் எஸ்ஓடி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், கச்சிபௌலி பகுதியில் கோண்டாபூர் தாவரவியல் சாலையில் இருந்து சிரெக் பப்ளிக் பள்ளி வழித்தடத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை மடக்கி பிடித்து சோதனை நடத்தியதில், அதில் கட்டுக் கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 2 பெட்டிகள் முழுவதும் இருந்த அந்த 500 ரூபாய் கட்டுகளின் மொத்த மதிப்பு 5 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாருடைய பணம்?
பணத்தை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் அது வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமானது எனத் தெரிகிறது. அந்த பணம் ஐடி துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், உரிய ஆவணங்களை சமர்பித்து உரிமையாளர் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரூ.1,700 கோடி மதிப்பில் பறிமுதல் நடவடிக்கை:
ஐந்து மாநில தேர்தல்களில் வாக்காளர்களை கவரும் நோக்கில் வழங்கப்பட இருந்த, சுமார் 1,760 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில், இலவசப் பொருட்கள், போதைப் பொருட்கள், பணம், மதுபானம் மற்றும் தங்கம் போன்ற விலையுயர்ந்த பொருட்களும் அடங்கும். அக்டோபர் 9ஆம் தேதி 5 மாநில தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு என்பது, 2018ஆம் ஆண்டு இந்த மாநிலங்களில் முந்தைய சட்டமன்றத் தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பதிப்பை விட ஏழு மடங்கு (ரூ. 239.15 கோடி) என்று தேர்தல் குழு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் முறையே நவம்பர் 25 மற்றும் நவம்பர் 30 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின்படி, குஜராத், இமாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா மற்றும் கர்நாடகா ஆகிய 6 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் ரூ.1,400 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.