சமீப காலமாகவே, டீப் பேக் விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். குறிப்பாக, பிரபலமான பெண்களின் புகைப்படங்களை எடிட் செய்து ஆபாசமான புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் பரப்புவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சமூக ஊடக நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் சந்திப்பு:
இந்த பிரச்னை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், டீப் ஃபேக் வீடியோக்களுக்கு எதிராக மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. போலியாக எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள் உருவாக்குவோருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், டீப் ஃபேக் வீடியோக்களை கட்டுப்படுத்த காலத்துக்கு ஏற்ப புதிய விதிகளை கொண்டு வர வேண்டும் என தொடர் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இது தொடர்பாக சமூக ஊடக நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர், "ஜனநாயகத்துக்கு டீப் பேக் விவகாரம் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது" என்றார்.
"டீப் ஃபேக் வீடியோக்களை கண்டறிதல், தடுத்து நிறுத்துதல், புகாரளிக்கும் அமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பயனர் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பகுதிகளில் தெளிவான செயல்பாட்டின் அவசியத்தை சமூக ஊடக நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன. இன்றே ஒழுங்குமுறையை உருவாக்குவதற்கான நடவடிக்கையை தொடங்குவோம்.
"விரைவில் புதிய சட்டம்"
குறுகிய காலத்திற்குள் டீப் ஃபேக் விவகாரத்தில் புதிய விதிமுறைகளை உருவாக்குவோம். இது ஏற்கனவே உள்ள கட்டமைப்பை மாற்றுவது அல்லது புதிய விதிகள் அல்லது புதிய சட்டத்தை கொண்டு வருவது தொடர்பாக இருக்கலாம். டிசம்பர் முதல் வாரத்தில் அடுத்த கூட்டத்தை நடத்துவோம். அது, இன்றைய முடிவுகள் மற்றும் ஒழுங்குமுறை வரைவில் என்ன சேர்க்கப்பட வேண்டும் என்பது பற்றியதாக இருக்கும்" என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
வீடியோ கான்பரன்சிங் வழியாக நேற்று ஜி20 உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, "டீப் ஃபேக் விவகாரம் பெரும் கவலை அளிப்பதாக உள்ளது. சமூகத்துக்கு ஏஐ தொழில்நுட்பம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்" என்றார்.
சமீபத்தில், இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவரின் வீடியோவை எடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா முகத்தை வைத்து எடிட் செய்திருந்தனர். அது இணையத்தில் மிகப் பெரியளவில் விவாதத்தைக் கிளப்பியது. எடிட் செய்யப்பட்ட வீடியோ என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அந்த வீடியோ உண்மையானதை போன்றே இருந்தது.
அதேபோல் நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் கஜோல் ஆகியோர் தொடர்பான மார்பிங் செய்யப்பட்ட டீப் பேக் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், சில நடிகைகளை ஆபாசமாக சித்தரித்தும் புகைப்படங்கள் வெளியானது. ஷாருக் கான், விராட் கோலி மற்றும் அக்ஷய் குமார் போன்றவர்களின் டீப் ஃபேக்கை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் விளம்பர போஸ்டர்கள் வெளியிடப்பட்டது.